Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் போதைப்பொருள்-தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பு தேவை

ஜோகன்னஸ்பர்க்: ‘போதைப்பொருள்-தீவிரவாதம் இடையேயான தொடர்பை எதிர்ப்பதில் ஜி20 நாடுகளிடையே கூட்டு ஒத்துழைப்பு அவசியம்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டு அரங்கிற்கு வந்த பிரதமர் மோடியை, தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா ‘நமஸ்தே’ எனக்கூறி வரவேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி20 மாநாட்டை புறக்கணித்த நிலையில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் நேற்று நடந்த ‘யாரையும் பின்தங்க விடாமல் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி’ என்ற அமர்வில் உலக தலைவர்கள் தொடக்க உரையாற்றினார்.

அதில் பிரதமர் மோடி பேசியதாவது: பென்டானில் போன்ற ஆபத்தான போதைப்பொருட்கள் விரைவாக உலகம் முழுவதும் பரவி வருவது கவலை அளிக்கிறது. இது பொது சுகாதாரம், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் போதைப்பொருள் கடத்தல் தீவிரவாதத்திற்கான முக்கிய நிதி ஆதாரமாகவும் திகழ்கிறது. எனவே போதைப்பொருள்-தீவிரவாத தொடர்புகளை எதிர்க்க ஜி20 நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு அவசியம். இது போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை சீர்குலைக்கவும், சட்டவிரோத நிதி ஓட்டங்களை நசுக்கவும், தீவிரவாதத்திற்கான முக்கிய நிதி ஆதாரத்தை பலவீனப்படுத்தவும் உதவும்.

இவ்வாறு கூறினார். மாநாட்டின் இடையே, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

* பிரகடனம் ஏற்கப்பட்டது

ஜி20 மாநாட்டின் நிறைவாகவே மாநாட்டு பிரகடனம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்காததால் பிரகடனத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனால் வழக்கத்திற்கு மாறாக மாநாட்டின் தொடக்க நாளான நேற்றே மாநாட்டு பிரகடனம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமித்த கருத்துடன் ஏற்கப்பட்டது. அமெரிக்காவை மீறி பிரகடனத்தை நிறைவேற்றியது ஆப்ரிக்க கண்டத்தின் புரட்சிகரமான தருணம் என தென் ஆப்ரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் ரொனால்ட் லமோலா கூறினார்.