Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 வயது சிறுவன் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பரிதாப பலி: சென்னை அருகே சோகம்

சென்னை: சென்னை அருகே நண்பனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வெயிலில் சென்ற 17 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பட்டாபிராம், பி.டி.எம்.எஸ்., பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (17). இவரது நண்பர் ஆவடி அடுத்த திருநின்றவூர், கோமதிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (17). இருவரும் பிளஸ் 2 படித்துள்ளனர். இவர்களில் ஹரிஹரசுதன் இதய நோய் பாதிப்பு உள்ளவர் என கூறப்படுகிறது. மேலும் சக்தியும் இணை வழி நோயால் பாதிக்கப்பட்டவர். எனவே, வெயில் அதிகம் தாக்கும் நேரத்தில் வெளியே சென்றால் மயங்கி விழுவது வழக்கம். இந்நிலையில், ஹரிஹரசுதன் இதய நோய் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அதிகாலை உயிரிழந்தார். எனவே, தனது நண்பனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சக்தி அன்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் சென்றுள்ளார். நண்பனின் சடங்கில் கலந்துகொண்ட நிலையில் திடீரென சக்தி மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை, மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், வியர்வை சுரக்கும் சுரபிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும், மற்ற இணை வழி பாதிப்புகள் இருந்ததாலும் சக்தி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.