Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழ மரங்கள் மூலம் பக்கா வருமானம்...இயற்கை வெள்ளாமையில் அசத்தும் முன்னாள் ராணுவ வீரர்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டுவாணம் கிராமத்தைச் சேர்ந்த சதானந்தன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இப்போது தனது 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து ஒரு தற்சார்பு வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஒரு காலைப்பொழுதில் தனது கொய்யாத்தோட்டத்தில் கவாத்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சதானந்தனைச் சந்தித்துப் பேசினோம்.‘`பத்தாவது வரைதான் படித்திருக்கிறேன். ராணுவத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் 1986ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தேன். சிப்பாயாக பணியைத் தொடங்கி 2003ம் ஆண்டு நாயக்காக பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்றேன். இதுபோக இசட் பிரிவு பாதுகாப்பு பிரிவின் கீழ் முக்கிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு டிரைவராக வேலை பார்த்தேன். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்தேன். அந்த எண்ணம் இப்போது எனது 10 ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் நனவாகி இருக்கிறது.

தற்போது இந்த நிலத்தில் ஒரு ஏக்கர் கொய்யா, மூன்று ஏக்கர் வாழை பயிரிட்டு இருக்கிறேன். மல்கோவா, செந்தூரா, மல்லிகா, நீலம், இமாம்பசந்த் ரக மா மரங்களை 3 ஏக்கரில் வைத்திருக்கிறேன். இதுபோக மீதமுள்ள நிலத்தை ஆடிப்பட்ட நெல் நடவுக்காக தயார்படுத்தி வருகிறேன். விவசாயி என்றால் கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்ட வேண்டும் அல்லவா? அதனால் 30 நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள கொய்யாவை அடர் நடவு முறையில் நடவு செய்திருக்கிறேன். இதற்கான கன்றுகளை கடந்த 2005ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வாங்கி வந்தேன். இவை அனைத்தும் ராஜமுந்திரி நாற்றுகள் என்பதால் வாங்கி வரும்போதே 4 அடி உயரத்தில் இருந்தன. ஒவ்வொரு கன்றிலும் பூக்களும், பிஞ்சுகளுமாக இருந்தன. ஒரு ஏக்கரில் நடவு செய்ய 400 கன்றுகள் தேவைப்பட்டன. கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் மூன்று முறை உழவு ஓட்டினேன். அதன்பிறகு 3×3×3 என்ற கணக்கில் குழி எடுத்து, அதில் நாட்டு மாட்டு எரு, வேப்பம்புண்ணாக்கு போட்டு நடவு செய்தேன். நடவு செய்த ஒரு நாள் கழித்து உயிர்த்தண்ணீர் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து செடிகளில் இருந்த பூ மற்றும் பிஞ்சுகளைப் பறித்து, அவற்றை அரைத்துக் காய வைத்து மரத்திற்கே உரமாக்கினேன்.

மாதம் ஒருமுறை மரத்திற்கு மாட்டு எருவை உரமாக வைப்பேன். மரங்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். இதனால் அதிக தண்ணீர் விரயம் ஆவது கிடையாது. செடிகளை நடவு செய்த 8வது மாதத்தில் இருந்து மரங்களில் இருந்து பூக்கள் வரத்தொடங்கும். அந்த சமயத்தில் பூக்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க நீம் ஸ்பிரே தெளிப்பேன். இந்தக் கலவையை நானே நேரடியாக தயார் செய்கிறேன். இதற்கு 50 மில்லி வேப்ப எண்ணெயை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்களின் மேல் சிறிதளவு ஸ்பிரே செய்வேன். இதன்மூலம் பூச்சிகள் தாக்காமல் இருப்பதோடு, விளைச்சலும் அதிகரிக்கும். பூக்கள் வந்த 2வது மாதத்தில் காய்கள் முழுவதுமாக வந்துவிடும். காய்கள் பழமாவதற்கு முன்பே பறித்து விற்பனைக்கு அனுப்பிவிடுவோம். காய்களை பறித்த பின்பு கவாத்து செய்வோம். அப்போதுதான் புதிய கிளைகள் வரும். மகசூலும் கூடுதலாக கிடைக்கும். முதலாம் ஆண்டில் மட்டும்தான் ஒரு அறுவடை செய்தேன். தற்போது ஆண்டுக்கு இரண்டு அறுவடை செய்கிறேன்.

ஒரு ஏக்கரில் இருந்து 5 டன் கொய்யா மகசூலாக கிடைக்கிறது. இதனை சராசரியாக ரூ.30 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு அறுவடைக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. வருடத்திற்கு இரண்டு அறுவடை செய்வதால் ரூ.3 லட்சம் வருமானம் கிடைக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாட்டு மாட்டு எருவையும், ஆங்காங்கே தோட்டத்தில் இருக்கும் வேப்ப மரங்களின் மூலம் எடுக்கும் வேப்ப எண்ெணயையும் மட்டுமே பயன்படுத்துகிறேன். இதனால் பெரிய அளவில் செலவு எதுவும் இல்லாததால் அத்தனையும் லாபமாக கிடைக்கிறது. இதே மா மரங்களில் இருந்து நல்ல விளைச்சல் கிடைக்கிறது. இமாம்பாசந்த்தில் இருந்து மட்டும் ஒரு சீசனுக்கு 130 கிலோ பழம் கிடைக்கிறது. இதனை ஒரு கிலோ ரூ.150 என்ற கணக்கில் விற்பனை செய்வதன் மூலம் ரூ.19,000 வருமானம் கிடைக்கிறது. அதேபோல் மல்கோவாவில் இருந்து ஒரு சீசனுக்கு 700 கிலோ பழங்கள் கிடைக்கிறது. இதனை ஒரு கிலோ ரூ.100 என்ற கணக்கில் விற்பனை செய்வதால் ரூ.70,000 கிடைக்கிறது. செந்தூராவில் இருந்து ஒரு டன் கிடைக்கிறது. இதனை ஒரு கிலோ ரூ.40 என்ற கணக்கில் விற்பனை செய்வதன்மூலம் ரூ.40,000 கிடைக்கிறது. நீலத்தில் இருந்து 1 டன் கிடைக்கிறது.

இதனை சராசரியாக ஒரு கிலோ ரூ.50 என்ற கணக்கில் விற்பனை செய்வதால் ரூ.50,000 கிடைக்கிறது. இந்த வருடம் மாம்பழத்திற்கு சரியான விலை இல்லாததால் பல விவசாயிகள் நஷ்டம் அடைந்தார்கள். ஆனால் எனக்கு இந்த வருடத்தில் கூட நஷ்டம் ஏற்படவில்லை. நான் பெங்களூர் மற்றும் சென்னையில் ரெகுலர் கஸ்டமர்களை வைத்திருக்கிறேன். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் எனது மாம்பழங்களை அவர்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். இதேபோல வாழையில் இருந்தும் எனக்கு ஒரு கணிசமான வருமானம் கிடைக்கிறது. இவை அனைத்தும் இயற்கை முறையில் நான் செய்த விவசாயத்திற்கு கிடைத்த பரிசு என்றுதான் சொல்லுவேன்’’ என மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

தொடர்புக்கு:

சதானந்தன்: 94425 11913.

கொம்பு சாண உரம்... பயிர்களுக்கு வரம்!

பசுமாடுகள் நமக்கு பல வகைகளில் பலன் தருகின்றன. அவை இறந்த பிறகும் நமக்குத் தரும் ஒரு அற்புதம்தான் கொம்பு சாண உரம். நமது மண்வளத்தைப் பெருக்கி, மகசூலை அதிகரிக்கச் செய்யும் இந்த உரத்தை நாம் எளிதாக தயாரித்துப் பயன்படுத்தலாம். செப்டம்பர் தொடங்கி பிப்ரவரி வரையிலான குளிரான மாதங்களில் இந்த உரத்தை நாம் தயாரிக்கலாம். இதற்கு நாம் இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழம் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பை புதைத்துவிட வேண்டும். சுமார் 4-6 மாத காலம் கழித்து எடுத்து, மண் பாத்திரத்தில் ஒரு வருட காலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஒரு கொம்பை 3-4 முறைகூட பயன்படுத்தலாம்.ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை 13 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து தெளிக்கலாம். மாலை வேளைகளில் பயிர் செய்வதற்கு முன்பாக நிலத்தில் இதைத் தெளிக்க வேண்டும். கொம்பு சாண உரம் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும். மூடாக்கை மட்க வைப்பதோடு, கம்போஸ்டை வேகமாகச் செயல்பட வைக்கவும் இந்த உரம் உதவுகிறது.