நட்பு சுட்டல் எது, உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு எது என பிரித்துப் பார்க்கத் தெரியும்: கம்யூனிஸ்ட் கட்சி முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: நட்பு சுட்டல் எது, உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு எது என்று எங்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும் என கம்யூனிஸ்ட் கட்சி முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைபெற்ற சோசலிசக் கியூபாவைக் காப்போம் ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம், பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டைக் கொண்டாடுவோம் என்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:
நமக்குள் இருக்கின்ற தோழமை என்பது, தேர்தலுக்கான நட்பு இல்லை, அரசியல் லாப-நஷ்டங்களை பார்க்கின்ற நட்பு இல்லை, நமக்குள் இருப்பது, கொள்கை நட்பு, கோட்பாட்டு நட்பு, லட்சிய நட்பு, இதுதான் பலருக்கும் கண்ணை உறுத்துகின்றது. அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, அண்மையில் கம்யூனிஸ்டுகள் மேல் பாசம் பொங்கிக் கொண்டு வருகிறது. அடிமைத்தனத்தைப் பற்றி பழனிசாமி பேசலாமா? அவருக்கு சொல்லிக் கொள்வதெல்லாம், இங்கே யாரும், யாருக்கும் அடிமையாக இல்லை.
தோழர்கள் சுட்டிக்காட்டுவதில் உடன்பாடானது எது என்பதை எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன். கூட்டணி இருக்கிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டாமலும் இல்லை, சுட்டிக்காட்டுகிறார்கள் என்று நான் புறக்கணித்ததும் இல்லை. நட்பு சுட்டல் எது, உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு எது என்று எங்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும். உலகம் முழுவதும் நடைபெறும் ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்க வேண்டிய நெருக்கடி இப்போது இருக்கிறது.
ஒன்றியத்தை ஆளும் பாஜ அரசை கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஐந்து சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து, ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், எதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக வரியை உயர்த்தி அறிவிக்க வேண்டும்?. இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால், பிரதமர் மோடி பதிலே சொல்லவில்லை. இது அவருடைய பலவீனத்தின் அடையாளம். ஆனால், கியூபாவின் அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, பலத்தின் அடையாளமாக இருந்தார். உலகத் தலைவர்களின் அடையாளமாக இருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவில் வாழ்த்தி, ஏகாதிபத்திய சதிச் செயல்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையுடன், இதே தோழமையுடன் எந்நாளும் இருப்போம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில், கியூபா குடியரசின் இந்திய தூதர் யுவான் கார்லோஸ், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பாலகிருஷ்ணன், நடிகை ரோகினி, செல்வா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.