Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மனைவி திருநங்கையா? அமெரிக்காவில் பரபரப்பு வழக்கு

நியூயார்க்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மனைவி பிரிகெட் ஒரு திருநங்கையா என்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் அதிபராக இருப்பவர் இம்மானுவேல் மேக்ரான். அவரது மனைவி பிரிகெட். அதிபர் இம்மானுவேல் மேக்ரானை விட 25 வயது மூத்தவர். மேக்ரான் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போது அவருக்கு ஆசிரியராக இருந்தார். அப்போது அவருக்கு 3 குழந்தைகள் இருந்தன.

அவரது மகளின் வகுப்பு தோழர் மேக்ரான். அந்த அடிப்படையில் வீட்டுக்கு சென்ற போது பிரிகெட்டுக்கும், மேக்ரானுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. மேற்படிப்புக்காக பாரிஸ் சென்ற மேக்ரான் 2007ல் தான் வாக்குறுதி அளித்தபடி பிரிகெட்டை மணந்தார். தற்போது பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவியை தொடர்ந்து 2வது முறை வகித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் விமானத்தில் இருந்து கீழே இறங்கும் போது அதிபர் மேக்ரானை, மனைவி பிரிகெட் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில் பிரிகெட் ேமக்ரானுக்கு எதிராக ஒரு வினோதமான பாலின வழக்கு அமெரிக்காவில் வந்துள்ளது. அவர் பெண் அல்ல, திருநங்கை என்ற குற்றச்சாட்டு பிரான்ஸ் நாட்டில் அல்ல, அமெரிக்காவில் எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணி பிரிகெட் பெண் அல்ல, அவர் ஒரு ஆண் அல்லது திருநங்கை என்று கூறியிருக்கிறார். பிரிகெட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் 2017ல், நடாச்சா ரே என்ற ஒரு வலைப்பதிவர் மூலம் வெளியானது. 2022ல் பிரான்ஸ் தேர்தலுக்கு முன்பு இந்த குற்றச்சாட்டு வைரலானது.

அவர் மீது பிரிகெட் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடாச்சா ரே குற்றவாளி என்று 2024 செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டார். 2025 ஜூலை மாதம் இந்த குற்றச்சாட்டு ஒன்றும் அவதூறாக இல்லை என்று கூறி பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்தது. தற்போது அமெரிக்காவை சேர்ந்த கேண்டஸ் ஓவன்ஸ் இந்த குற்றச்சாட்டை எழுப்பி உள்ளதால் அவர் மீது, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், அவரது மனைவி பிரிகெட் ஆகியோர் இணைந்து அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் பிரான்ஸ் முதல் பெண்மணி பிரிகெட்டின் புகைப்படம், அறிவியல் ஆதாரங்கள், அவர் கர்ப்பமாக இருந்த காலங்கள், அவர் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்த ஆதாரங்கள் ஆகியவற்றை அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களின் வழக்கறிஞர் டாம் கிளேர் என்பவர் இந்த வழக்கை நடத்துகிறார். அவர் கூறுகையில்,’பிரான்ஸ் அதிபரும், அவரது மனைவியும் உலக அரங்கில் முக்கியமானவர்கள் என்பது தெளிவாகிறது.

ஆனால் அவர்களும் மனிதர்கள்தான். மேலும் அவர்கள் அடையாளங்களைப் பற்றி உலகிற்கு பொய் சொல்ல சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்படுவது அவர்களுக்கு அவமானகரமானது. அவர்களை புண்படுத்துகிறது. இந்த வழக்கில் புகைப்படம், அறிவியல் ரீதியான ஆதாரங்களை முன்வைக்க உங்களை நீங்களே உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது நம்பமுடியாத அளவிற்கு வருத்தமளிக்கிறது. எனவே எப்போதும் சரியானதைச் செய்யுங்கள். உண்மையைச் சொல்லுங்கள், இந்தப் பொய்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்’என்று கேட்டுக்கொண்டார்.

* அவதூறா?

பிரான்ஸ் அதிபர் மனைவி பிரிகெட்டை ஒரு ஆண் அல்லது திருநங்கை என்று குற்றம் சாட்டிய கேண்டஸ் ஓவன்ஸ் கூறுகையில், ‘பிரான்ஸ் அதிபர் மேக்ரான், மனைவி பிரிகெட் சார்பில் என் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு வெளிப்படையான, அவநம்பிக்கையான மக்கள் தொடர்பு உத்தி. பிரிகெட் மிகவும் முட்டாள்தனமான பெண்’ என்றார்.