சென்னை: திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணி, கடந்த 64 வருடங்களாக பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார். அவரது பங்களிப்பை பாராட்டி, சில நாட்களுக்கு முன்பு பிரான்சு நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டது. சென்னையிலுள்ள பிரான்சு கலாச்சார மையத்தில் நேற்று நடந்த விழாவில், இந்தியாவுக்கான பிரான்சு தூதர் தியெரி மாத்தோவிடம் இருந்து செவாலியே விருதை தோட்டா தரணி பெற்றார்.
அப்போது பேசிய தோட்டா தரணி, ‘இந்த விருது ஒரு குறிப்பிட்ட படத்துக்கு கிடைத்தது என்று சொல்ல முடியாது. நான் பணியாற்றிய அனைத்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சிறந்தவர்கள்தான். இது மற்ற கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். மிகவும் சவாலான படத்தில் இதுவரை நான் பணியாற்றவில்லை’ என்றார்.
முன்னதாக தமிழ் படவுலகில் செவாலியே விருதை நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) ஆகியோர் பெற்றனர். தற்போது இப்பட்டியலில் தோட்டா தரணி இணைந்துள்ளார். அவருக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
