சென்னை: சரக்கு ரயில் சேவை கட்டணம் அடுத்த மாதம் முதல் உயர்கிறது. இந்திய ரயில்வே துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளில் இருந்து பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ரயில்களை வழித்தடம் மாற்றுவதற்கும் தனியாரிடம் வசூலிக்கப்படும் இன்ஜின்கட்டணத்தை அடுத்த மாதம் 15ம் தேதி முதல் உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் கடந்த 14ம் தேதி மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின்படி, இந்த இன்ஜின்கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. இது ஒரு மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படும் கட்டணமாகும். இந்த கட்டண உயர்வு 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2009ம் ஆண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அதிகரிக்கப்படுகிறது.
கட்டண உயர்வுக்கான காரணங்களை ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இன்ஜினின் செயல்பாட்டு செலவு படிப்படியாக அதிகரித்துள்ளது. எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் போன்ற செலவுகள் கணிசமாக உயர்ந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். கடந்த 16 ஆண்டுகளில் இந்த செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்கின்றனர்.