லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்து வரும் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, இந்தியாவின் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி, நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், 3வது இடத்துக்கான பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவில் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த, 3வது இடத்துக்கான பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கான போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான, நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனும், தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தாவும் மோதினர்.
இப்போட்டியின் முதல் ரவுண்டில் பிரக்ஞானந்தா அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதன் பின் நடந்த 5 ரவுண்டுகளிலும் கார்ல்சன் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம், 3வது இடத்தை பிடிக்கும் பிளே ஆப் சுற்றுக்கு அவர் முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா வெற்றி பெற்றார்.
இதையடுத்து, 3வது இடத்துக்கான பிளே ஆப் சுற்றில் கார்ல்சன் - நகமுரா மோதவுள்ளனர். அதேபோல் முதல் இடத்துக்கான போட்டியில் ஹான்ஸ் நீமான் - லெவோன் ஆரோனியன் மோதுவார்கள். 5வது இடத்துக்கான பிளே ஆப்பில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி - அமெரிக்காவின் கரவுனா மோதவுள்ளனர். 7வது இடத்துக்கான பிளே ஆப்பில் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ மோதுவர்.