இலவச வீடுகள் கட்டி தருவதாக ரூ.92 லட்சம் மோசடி 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏ.திருஞானசம்பந்த மூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் சவுத் இண்டியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடு இல்லாத சுமார் 2 ஆயிரம் பேருக்கு வீடுகளை கட்டி தருவதாகவும் தன்னுடன் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்றும் கூறினார். இதற்காக சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்டரி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் விக்டோரியாவிடம் அழைத்து சென்றார்.
இதை நம்பி ரூ.60 லட்சத்தை அவர் கூறிய கட்டிட நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக எங்களது டிரஸ்ட் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தேன். ஆனால், ராஜசேகர் அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டார். கட்டிட பணிகளை மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு என்னை காலி செய்துவிடுவதாக மிரட்டினர். திருவண்ணாமலை டிஎஸ்பியிடம் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவண்ணாமலை நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. மொத்தம் என்னிடமிருந்து ரூ.92 லட்சத்து 36,635 மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துமாறு பலமுறை மனு அனுப்பியும் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, ராஜசேகர் மற்றும் விக்டோரியா ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் சொத்துகளை முடக்கம் செய்து எனது பணத்தை மீட்டு தருமாறு மாவட்ட டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வி.நந்தகோபாலன், ஜெ.ஜனார்தனன் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.