ஈரோடு : ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் உதடு பிளவு பட்ட 2 குழந்தைகளுக்கு இலவச பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 6 வயது குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே பிளவுபட்ட உதடு இருந்தது. ஆறு மாத தொடர் கண்காணிப்புக்கு பிறகு குழந்தைக்கு பிளவுபட்ட உதடு கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.
தற்போது, குழந்தைக்கு பால் குடித்தல் திறன் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதேபோல் பவானியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கும் பிளவுபட்ட அன்னம் இருந்தது. இதனை கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த குழந்தைக்கு பெறையேறும் தன்மை குறைந்து, வரும் காலங்களில் குழந்தையின் பேச்சுதன்மை சீராகும்.
இந்த அறுவை சிகிச்சை தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைகளை ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேசன், உறைவிட மருத்துவர் சசிரேகா தலைமையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர் கதமன், டாக்டர் கார்த்திக், மயக்கவியல் டாக்டர் கதிரவன் அடங்கிய மருத்துவ குழுவினர் செய்தனர்.