சென்னை: அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாவட்டம் கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 21ம் தேதி முதல் துவங்கப்பெற்று நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சாந்தோம் நெடுஞ்சாலை மைலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கான கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 13ம் தேதி ஆகும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் இணைய வழியில் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.