Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் 17 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

*அரசு கொறடா ராமச்சந்திரன் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை நான்கு ஆண்டுகளில் 17 ஆயிரத்து 718 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 67 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள ஜெல் மெம்மோரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் வரவேற்றார். நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஊட்டி எம்எல்ஏ., கணேசன், நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஜெல் மெம்மோரியில் பள்ளி மாணவிகள் 109 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு என அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

ஒன்றிய அரசு கல்வி நிதி தர மறுத்த போதிலும்,அதனை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், பல்வேறு திட்டங்களை பள்ளிக் கல்வித்துறைக்காக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.கல்வியில் சிறந்து விளங்கி வரும் தமிழ்நாடு, இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக செயப்பட்டு வருகிறது. 2020 ஆண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 2024ம் ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்தார். நடப்பு ஆண்டிற்கு ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தரம் உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000ம் வழங்கி வருகிறார். அதேபோல், மாணவர்களுக்கும் ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யப்படுகிறது.

இதனால், தற்போது ஏராளமான மாணவர்கள் வெளி நாடுகளில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு உயர் கல்வியில் 75 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மாணவர்கள், தமிழக அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் படிக்க வேண்டும்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் 5,410 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட்டது.2022-23ம் ஆண்டில் 4,074 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 2023-24ம் ஆண்டு 4,087 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 97 லட்சம் செல்வில் சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

2024-2025ம் ஆண்டு 4,147 மாணவ, மாணவிகள் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மொத்தம் நான்கு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் 17,718 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மாணவர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், என்றார். இவ்விழாவில் கவுன்சிலர்கள் தம்பி இஸ்மாயில்,ரமேஷ்,ரவி,விஷ்ணுபிரபு,நாசர்லி, மோகன்குமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.