பல ஆயிரம் கோடி மோசடி நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை விரைந்து பறிமுதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவன பல ஆயிரம் கோடிக்கு முதலீடு வசூலித்து திருப்பி தராமல் மோசடி செய்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் தேனி மாவட்டம் கம்பம், தாமரைக்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் வாய்ப்பூட்டான்பட்டி கிராமங்களில் உள்ள பல ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தக் கோரி, தேவிகுமார் உட்பட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தரப்பில், ‘‘நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக 20.6.2023ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை 14,540 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்தாரர்களிடம் ரூ.188.29 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்களை பொறுத்தவரை மனுதாரர்கள் முதலீடு செய்வதற்கு முன்பே தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய முடியாது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சட்டத்தில், மோசடி நிதி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் பணி முடிவடையும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறும் வகையில் மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும். சொத்துக்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தால் அதை விரைவில் முடிக்க வேண்டும். இப்பணிக்கான மதிப்பீட்டு குழு மற்றும் துணைக்குழுவுக்கு விசாரணை அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.