ரூ.60 கோடி மோசடி வழக்கு; நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி: நான்கரை மணி நேரம் தீவிர விசாரணை
மும்பை: மும்பையில் ரூ. 60 கோடி மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நான்கரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். பிரபல தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா மற்றும் சிலர் தன்னிடம் ரூ.60.4 கோடியை மோசடி செய்துவிட்டதாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா இயக்குநர்களாக இருந்த ‘பெஸ்ட் டீல் டிவி’ என்ற நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் மூலம் பெறப்பட்ட அந்தப் பணத்தை, அவர்கள் தங்களது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ராஜ்குந்த்ராவிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க ‘லுக்அவுட்’ சுற்றறிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய நகர்வாக, நேற்று நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நான்கரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வங்கி கணக்கு விவரங்களையும், விளம்பர நிறுவனத்தின் ஆவணங்களையும் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஷில்பா ஷெட்டியின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், ‘இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை. இந்த விவகாரம் ஏற்கனவே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தை கலைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி கடந்த 2016ம் ஆண்டே அந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து விலகிவிட்டார். எனவே, அதற்குப் பிறகு நடந்த நிதி சிக்கல்களுக்கு அவர் பொறுப்பாக மாட்டார்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.