ரூ.1,376 கோடியில் திருவள்ளூர்-திருத்தணி இடையே நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் முடிவது எப்போது? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
திருத்தணி: திருவள்ளூர் முதல் திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதி பொன்பாடி வரை தேசிய நெடுஞ்சாலை 44 கி.மீ தூரத்தில் ரூ.1376 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதால், முழுமையான பணிகள் எப்போது முடிக்கப்படும் என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, ஆந்திரா-தமிழ்நாடு இடையில் போக்குவரத்து மற்றும் வர்த்தக சேவையில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. 133 கிமீ நீளம் கொண்ட சாலையில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. 2 வழி சாலையாக உள்ள இச்சாலையை போக்குவரத்து வசதி மற்றும் சாலைகள் கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் 6 வழி சாலையாக மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி, திருநின்றவூர் முதல் திருப்பதி வரை 124 கி.மீ தூரம் கொண்ட இருவழி சாலையை மேம்படுத்தும் வகையில், முதல் கட்டமாக ஆந்திராவில் புத்தூர் முதல் ரேணிகுண்டா வரை 20 கிமீ தூரம் 6 வழி சாலை ரூ.1,346 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, திருநின்றவூர் முதல் திருவள்ளூர் வரை 17 கிமீ 4 வழிச்சாலை பணிகள் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. திருவள்ளூர் முதல் திருத்தணி அருகே, ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி வரை 2 வழி தேசிய நெடுஞ்சாலை 44 கிமீ தூரம் 2 வழி சாலையை 4 வழி சாலையாக மேம்படுத்த ரூ.1.376 கோடி கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக சாலைக்கு இருபுறமும் நிலம் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை எல்லை கற்கள் நடப்பட்ட பகுதிகளில் இருந்த கட்டிடங்கள், மின் கம்பங்கள், பேருந்து நிழற்குடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
திருத்தணி முதல் பொன்பாடி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை தற்போது அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலையை விரிவுப்படுத்தி மண் கொட்டி சமன் செய்து சாலைக்கு இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தனியார் நிறுவனம் சார்பில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கனரக வாகனங்கள், இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைக்கு இடையில் ஆறுகள், கிராமங்கள் இருப்பதால் உயர்மட்ட பாலங்கள், சிறு பாலங்கள், சுரங்கப்பாதைகள் கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலைகள் ஏராளமாக அமைக்க வேண்டி உள்ளது. குறிப்பாக, சாலைகள் சமன் செய்ய ஏரிமண் அதிக அளவில் தேவைப்படுவதால், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ஏரி மண் எடுத்து பயன்படுத்த வேண்டிய நிலையில் சாலைப் பணிகளுக்கு காலதாமதம் அதிகரித்து வருகிறது.
சில இடங்களில் அனுமதி மீறி ஏரி மண் எடுப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால், மண் எடுக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பணிகள் தொடங்கி ஓராண்டு கடந்து விட்ட நிலையில் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. 100 சதவீத பணிகள் முடிக்க குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. சாலை விரிவாக்கப் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி-திருவள்ளூர் இடையில் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்தும், போக்குவரத்திற்கு வாகனங்கள் திசை திருப்பி விடப்படுவதால், திருத்தணி முதல் திருவள்ளூர் வரை 35 கிமீ தூரம் பயணம் செய்ய கூடுதலாக அரை மணி நேரம் தேவைப்படுவதோடு, சாலை பணிகள் நடைபெற்று வருவதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது.
எனவே, சாலை பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், வாகனங்கள் திருப்பி விடும் பகுதிகளில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கவும், இரவு நேரங்களில் ஒளிரும் விளக்கு அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
வர்த்தகம் மேம்படும்
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவுப்படுத்தும் பணியில் ஒரு பகுதியாக, திருத்தணி அருகே, பொன்பாடி சோதனை சாவடிக்கு அருகில் ஆந்திர எல்லை முதல் புத்தூர் வரை 20 கிமீ தூரம் சாலையை 4 வழி சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முழுமையாக மேம்படுத்தப்பட்ட சாலையாக உருவெடுத்து இந்திய அளவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகவும், பெங்களூரு, சென்னை, பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாலையாக மாறி போக்குவரத்து சேவை, வர்த்தகம் மேம்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகளுடன் கிராமங்களை இணைக்கும் இணைப்பு வழி ஒரு சில இடங்களில் மட்டுமே ஏற்படுத்தி வருவதால், கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணித்து தங்களின் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் கிராமங்களுக்கு இணைப்பு வழி ஏற்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது.
இழப்பீட்டு தொகை குறைவு
தேசிய நெடுஞ்சாலைக்காக விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் இழந்த மக்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறைவான இழப்பீட்டு தொகை வழங்கி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்க முன்வரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


