அரியலூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரியலூரில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று நிருபர்ளுக்கு அளித்த பேட்டி: பாஜ கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும்போது நாங்கள் எப்படி அந்த கூட்டணியில் இருக்க முடியும். முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்க கூடாது என்பது தான் எங்களது கோரிக்கை. அதிலிருந்து மற்றவற்றை புரிந்து கொள்ளுங்கள். விஜய் பிரசாரத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
நிறைய இளைஞர்கள், இளம்பெண்கள், 40 வயதிற்கு உட்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர். விஜய் பேச்சு ஜெயலலிதா பாணியில் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஜெயலலிதா பாணியில் ஒருவர் பேசினால் அது மகிழ்ச்சி தான். விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று பலமுறை சொல்லி விட்டேன். அந்த கூட்டணியில் நான் இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் உண்டு. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.