கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாபர் மாடல் மசூதி கட்ட அடிக்கல் நாட்டு விழாவை நடத்திய எம்எல்ஏ: மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு
பஹராம்பூர்: மேற்கு வங்கத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாபர் மசூதி போன்ற புதிய மசூதி கட்ட திரிணாமுல் காங்கிரசின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ஹூமாயூன் கபிர் அடிக்கல் நாட்டு விழா நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ ஹூமாயூன் கபிர் சமீபத்தில் பாபர் மசூதி கட்ட அழைப்பு விடுத்தார். இதனால் மத அரசியலில் ஈடுபட்டதாக, கட்சியிலிருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜிநகரில் பாபர் மசூதி போன்ற மசூதியை கட்டுவதற்கான கபிர் அடிக்கல் நாட்டு விழா நடத்தினார். மசூதி கட்டப்படும் இடத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலையில் இருந்தே பலரும் மசூதி கட்ட பங்களிப்பை வழங்கும் வகையில் தலையில் செங்கல் சுமந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர். சவுதி அரேபியாவில் இருந்தும் மதகுருமார்கள் வந்து விழாவில் பங்கேற்றனர். ஒலி பெருக்கிகள் மூலம் குர்ஆன் ஓத, விழா மேடையில் சில சடங்குகளுடன் ஹூமாயூன் கபிர் ரிப்பன் வெட்டி அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி முடித்தார். இதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று இத்தகைய நிகழ்வு மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அரசியலமைப்பை மீறி எதுவும் செய்யவில்லை
விழா மேடையில் பேசியில் கபீர், ‘‘நான் அரசியலமைப்புக்கு விரோதமாக எதையும் செய்யவில்லை. வழிபாட்டு தலத்தை கட்டுவது அரசியலமைப்பு உரிமை. பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலதிபர் ரூ.80 கோடி தருவதாக வாக்குறுதி தந்துள்ளார். உள்ளூர் டாக்டர் ஒருவர் ஏற்கனவே ரூ.1 கோடி கொடுத்துள்ளார். மொத்த பட்ஜெட் ரூ.300 கோடி. 4,000 சதுர அடியில் பிரதான மசூதி அமையும், மொத்தம் 15.5 ஏக்கர் பரப்பளவில் இப்பணிகள் நடைபெறும். 33 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்களின் இதயத்தில் ஆழமான காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு இன்று சிறிய தைலம் பூசுகிறோம். இந்தியாவில் 40 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் 4 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இங்கு ஒரு மசூதியை கட்ட முடியாதா?’’ என்றதும் கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த கைத்தட்டலை எழுப்பினர்.
* டிஎம்சி விலகல்
கபீரின் நடவடிக்கைகளில் இருந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகி நின்றது. அவரது அரசியலை கட்சி ஆதரிக்கவில்லை என்பதால்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக மூத்த நிர்வாகிகள் கூறி உள்ளனர். கபீர் இனி சுதந்திர பறவை என்றாலும் அவரது செயல் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாததாகிவிட்டது என்றனர்.
* 40,000 பாக்கெட் பிரியாணி
எம்எல்ஏ கபீரின் உதவியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்காக 40,000 பாக்கெட் பிரியாணி செய்ய ஆர்டர் தரப்பட்டது. மேலும் உள்ளூர் மக்களுக்காக 20 ஆயிரம் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. உணவுக்கு மட்டுமே ரூ.30 லட்சம் செலவானது. விழா நடந்த இடத்திற்கு வாடகை ரூ.60 முதல் ரூ.70 லட்சம் இருக்கும். இருக்கை வசதிக்காக ரூ.10 லட்சம் செலவிடப்பட்டது’’ என்றார்.


