நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரயில்வே மேம்பாலத்துக்கான கர்டர்கள் அமைக்க சாரம் கட்டும் பணி துவக்கம்: பழையாற்றில் கொட்டிய மண் அகற்றம்
நாகர்கோவில்; நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரயில்வே மேம்பாலத்துக்கான கர்டர்கள் வைக்க சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. இது தவிர கூடுதல் ரயில் பாதைக்காக பழையாற்றின் கொட்டப்பட்ட மண்ணும் அகற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் ஒழுகினசேரி புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. புதிய மேம்பாலத்துக்காக இரு பக்கமும் தூண்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன. தண்டவாளம் அமைந்துள்ள நடு பகுதியில், கர்டர்கள் அமைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கான்கிரீட் அமைத்து பாலத்தை இணைக்க வேண்டும். ஆனால் கர்டர்கள் வருகை தாமதமாகி வந்தது.
மிக முக்கியமான பகுதி என்பதால், ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், மேம்பாலத்துக்கான கர்டர்கள் வந்தன. ஒவ்வொரு கர்டரும் 150 டன் எடை வரை இருக்கும். முதற்கட்டமாக 6 கர்டர்கள் வந்தன. இவை கிரேன் மூலம் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு அப்படியே கிடந்தன. பாலம் குறுகியதாகவும், கர்டர்கள் வீதியாகவும் இருந்தன. இதையடுத்து கர்டர்கள் அமைக்கும் வகையில், பாலத்தின் முன் பகுதியை இடித்து சற்று விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
இதற்காக தற்போது முதற்கட்டமாக கர்டர்கள் பொருத்த சாரம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. 6 இடங்களில் சாரம் அமைக்கப்பட உள்ளன. அதன் பின்னர் ரயில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. நேப்பியார் பால மாடலில் கர்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையே ஒழுகினசேரியில் கூடுதல் தண்டவாளம் அமைக்க பழையாற்றின் மண் கொட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது இந்த மண் அகற்றப்பட்டு வருகிறது.