முன்னாள் தேர்வாளர் பற்றி ஜஹானாரா அதிரடி புகார்: இச்சைக்கு நோ சொன்னதால் அணியில் இடம் இல்லை; வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் பலமுறை பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மகளிர் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹானாரா ஆலம் குற்றம் சாட்டியது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2022ம் ஆண்டுக்கு பின், முன்னணி பந்து வீச்சாளர் ஜஹானாரா ஆலம் இடம்பெறவில்லை. 3 ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த அவர் வங்கதேச மகளிர் அணியில் நிகழும் துன்புறுத்தல்கள் பற்றி தற்போது வாய் திறந்துள்ளார். 2 நாட்களுக்கு முன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மகளிர் அணி கேப்டன் நிகார் சுல்தானா, வங்கதேச கிரிக்கெட் முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக ஜஹானாரா தற்போது குற்றம் சாட்டி உள்ளார்.
ஜஹானாரா ஆலம் கூறியதாவது: வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகிகள் பலர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, கிரிக்கெட் முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் என்னிடம் பல முறை தவறாக நடக்க முற்பட்டார். ஒரு முறை என் தோள் மேல் கை வைத்து, காதருகே நெருக்கமாக வந்து மாதவிடாய் காலம் பற்றி கேள்வி எழுப்பினார். பல முறை அத்துமீறி நடக்க அவர் முற்பட்டார். அவரது மோசமான எண்ணத்துக்கு இடம் கொடுக்காததால், வங்கதேச கிரிக்கெட் அணியில் எனக்கு இடம் கிடைக்காமல் செய்து விட்டார். ஒரு அணியில் இருக்கும்போது, இதுபோன்ற விஷயங்களை பேச முடியாமல் போகிறது.
கிரிக்கெட்டில் பிரபலம் அடையாமல் இருக்கும்போது நம்மால் எதுவுமே சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது. நீங்கள் நினைத்தாலும் எதிர்ப்புக் குரலை எழுப்ப முடியாது. மஞ்சுருல் இஸ்லாமின் இச்சைகளுக்கு இடம் தராமல் போனதால், அடுத்த நாள் முதல் என்னை பல முறை அவர் அவமானப்படுத்தினார். இது தொடர்பாக தலைமை நிர்வாக அதிகாரிக்கு எனது கருத்தை எழுதி கடிதமாக தந்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அணியில் உள்ள பல மகளிரிடம், நெருக்கம் காட்டுவதை மஞ்சுருல் வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஜஹானாராவின் குற்றச்சாட்டுகள், வங்கதேச கிரிக்கெட் உலகில் பெரியளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.

