முன்னாள் பிரதமர்கள் நாட்டின் எதிர்காலம் பற்றி பேசினார்கள்: பதவியில் இருந்தவர்களை குறை சொல்பவர் மோடி; சரத் பவார் கடும் தாக்கு
அமராவதி: முன்னாள் பிரதமர்கள் நாட்டின் எதிர்காலம் பற்றி பேசி வந்தார்கள் என்றும், ஆனால் மோடி மற்றவர்களை குற்றம்சாட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்தார். மகாராஷ்டிரா, அமராவதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பல்வந்த் வான்கடே போட்டியிடுகிறார். பாஜ சார்பில் தற்போதைய எம்.பி. நவ்நீத் ரானா போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமராவதியில் நடந்த கூட்டத்தில் சரத் பவார் பேசுகையில், ‘‘ மோடி நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறார். ரஷ்ய அதிபர் புடினை பின்பற்ற பார்க்கிறார். நேருவில் இருந்து இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் வரை எல்லா பிரதமர்களையும் பார்த்துவிட்டேன். அவர்கள் எல்லோரும் நாட்டின் எதிர்காலம் பற்றி பேசுவார்கள். ஆனால் மோடி மற்றவர்களை குறை மட்டும் சொல்லி வருகிறார். நாட்டுக்கு நேரு செய்த சேவையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் மோடி எப்போதும் நேருவை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். தனது 10 ஆண்டு கால ஆட்யில் என்ன செய்தேன் என்று மோடி சொல்வதில்லை. மற்றவர்களை குறைதான் சொல்லி கொண்டிருக்கிறார்’’ என்றார்.
* மன்னிப்பு கேட்கிறேன்
சரத்பவார் பேசுகையில், 2019ம் ஆண்டு தேர்தலில் நவ்நீத் ரானாவை ஆதரித்து பிரசாரம் செய்தேன். மக்களும் நவ்நீத் ரானாவை எம்பியாக தேர்ந்தெடுத்தனர். இப்போது அவர் பாஜ சார்பில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் செய்த தவறுக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்’’ என்றார்.