இங்கிலாந்து அரசு அனுமதி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆலோசகரானார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
லண்டன்: அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊதியம் பெறும் ஆலோசகர் பதவியை ஏற்பதற்கு முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக். 2015ம் ஆண்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 2022ம் ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றார். 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்த உடன் பிரதமர் பதவி மற்றும் கட்சி பதவியை ராஜினாமா செய்தார். எம்பியாக மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில், அரசின் முன்னாள் அமைச்சர்களுக்கான வணிக நியமன விதிகளின் கீழ் வணிக நியமனங்கள் குறித்த ஆலோசனை குழுவை ரிஷி சுனக் அணுகியிருந்தார்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அரசின் கண்காணிப்பு அமைப்பானது அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மற்றும் ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் நிறுவனங்களுடன் ஊதியம் பெறும் ஆலோசகர் பதவியை ஏற்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சுனக் பதவியில் இருந்த காலத்தில் தனக்கு கிடைத்த எந்த சலுகை பெற்ற தகவலையும் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆலோசகர் பதவியின் மூலமாக கிடைக்கும் வருமானம் தனது மனைவி அஷதா மூர்த்தி தொடங்கியுள்ள கல்வி தொண்டு நிறுவனமான தி ரிச்மண்ட் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.