சேலத்துக்காரருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கோபிக்காரரை சந்திக்க ரெடியாகும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘கடந்த எம்பி தேர்தலில் தூங்கா நகரில் இலைக்கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் மலராத கட்சியினுடனான கூட்டணி தாமரை இலை தண்ணீர் போலத்தான் இன்னும் தொடருதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர்ல இலைக்கட்சியும், மலராத கட்சியும் இன்னும் மனசளவில கூட்டணியா செட்டாக வில்லையாம்.. இலைக்கட்சியும், மலராத கட்சியும் கூட்டணியா இல்லாத நேரத்தில் கூட தூங்கா நகர்ல இரண்டு தரப்பும் ரொம்பவே நெருக்கம் காட்டி வந்தாங்க.. தற்போது கூட்டணியான பிறகு தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமலே இருக்கிறார்களாம்..
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட்ட மருத்துவர் மூன்றாம் இடம் பிடிக்க மலராத கட்சி சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டார்.. இந்த தோல்வி தூங்கா நகரத்து இலைக்கட்சியினரை ரொம்ப அப்செட் ஆக்கி இருக்கு.. அதுவும் மலராத கட்சியை விடவும் கீழே போனது தாங்கிக் கொள்ள முடியாத வேதனையை தந்து விட்டதாம்.. அதிலிருந்து இலைக்கட்சியினர், மலராத கட்சியினருடன் அவ்வளவாக நட்பு பாராட்டுவதில்லையாம்.. இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் தூங்கா நகரத்துல மட்டும் இவர்களிடையே இன்னும் கூட்டணி இணக்கம் ஏற்படவில்லையாம்.. குறிப்பாக மலராத கட்சியினரின் திருமண நிகழ்ச்சிகளில் கூட இலைக்கட்சியினர் பங்கேற்பதில்லையாம்.. இது தூங்கா நகரத்து மலராத கட்சியினரிடையே ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கோபிக்காரரை சந்திக்க மாஜி அமைச்சர் ஒருத்தர் ரெடியாகிக்கிட்டிருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாஜி அமைச்சர் மணியானவர் தலைமையில் நடந்திருக்கு.. இதில், கலந்துகொள்வதற்காக தேனிக்காரர் அணியில் இருந்து பிரிந்து வந்த மற்றொரு மாஜி அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாம்..
ஆனால், அந்த மாஜி அமைச்சர் கலந்துகொள்ளவில்லையாம்.. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத மாஜி அமைச்சர், சேலத்துக்காரருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கோபிக்காரரை விரைவில் சந்திக்க திட்டமிட்டு உள்ளாராம்.. இதனால் தான் அவர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையாம்.. இந்த விவகாரம் தற்போது தலைமைக்கு சென்றுள்ளதாக இலைக்கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பழம் பார்ட்டியில தந்தை, மகன் கோஷ்டி தகராறு, காக்கிகள் நிலையம் வரைக்கும் புகாரா போயிருக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்துல முத்துல தொடங்கி கடையில முடியுற பகுதி இருக்குது.. அங்க இருக்குற காந்திசிலை அருகே அனைத்து தரப்பு கட்சி தலைவர்களோக பிறந்த நாளு, நினைவுநாளுன்னு பல நிகழ்ச்சிகள் நடத்துவாங்க.. அந்த வகையில 5 நாளுக்கு முன்னாடி பழம் பார்ட்டிகள், இடதுக்கீட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துற நிகழ்வு நடத்தினாங்க.. பழம் பார்ட்டிதான் இப்ப தந்தை, மகன் என்று ரெண்டு பிரிவாக பிரிஞ்சு போச்சே, இதனால நிகழ்ச்சிகள் எல்லாமும் இரண்டாகத்தான் நடக்குது..
இதுல மகன் அணியோட பிரிவுல இருந்து நகர நிர்வாகி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க.. தந்தை அணியை சேர்ந்த நகர நிர்வாகியும் வீர வணக்கம் செலுத்த வந்திருக்காங்க.. அப்போ தந்தை அணிக்கும், மகன் அணிக்கும் இடையில தகராறு ஏற்பட்டு, கை கலப்பாக மாறியிருக்குது.. காக்கிகள் தடுத்தும் கைகலப்பு நடந்திருக்குது.. அப்புறம் 2 அணிகளும் ஹாஸ்பிடல் சிகிச்ச முடிஞ்சி வீட்டுக்கு போயிருக்குறாங்க.. அதோட இந்த தந்தை, மகன் இரு அணி தகராறு காக்கிகள் நிலையம் வரைக்கும் தனி, தனி புகாராக போயிருக்குது.. இந்த புகார் மேட்டர் தான் மாவட்டத்துல பரபரப்பு பேச்சாக போய்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விதிகளை மீறி புதிய வசூல் சாவடி திறக்கப்படுவதற்கு பொதுநல அமைப்புகள் சேர்ந்து முதல்கட்ட எதிர்ப்பு பதிவு செய்து இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தென் மாநிலங்களில் சுங்கச்சாவடி விவகாரம் அவ்வப்போது பூதாகரமாகிறதாம்.. விதி மீறிய வசூலால் கொந்தளித்த பொதுநல அமைப்புகள், நீதி கேட்டு முறையிட்டு வருகிறதாம்.. தமிழகம் ஒட்டிய யூனியனில் புதிய சாவடி உதயமாகி சில மாதங்களே ஆவதால், புதுச்சேரி- நாகை புறவழிச்சாலையில் கடல்ஊர் ஒட்டிய மேடான பகுதியில் மேலும் ஒரு புதிய சாவடி அமைக்க நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கு..
இதனால் இரு மாநில மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாவர் என்பதால் பொதுநல அமைப்புகள் திரண்டு சாவடி அமைக்க வைத்திருந்த உபகரணங்களை சேதப்படுத்தி முதல்கட்ட எதிர்ப்பை பதிவுசெய்து இருக்காங்க.. 25 கிமீ தொலைவில் ஏற்கனவே ஒரு சாவடி உள்ள நிலையில் மீண்டும் வசூல் எதற்கு என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளதாம்.. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையை கைவிடுமாறு ஒன்றிய அரசுக்கு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாம்.. இவற்றை மீறி சாவடி அமைக்கப்படும் பட்சத்தில் அடுத்தடுத்த போராட்டத்தை முன்னெடுக்க இருமாநில மக்களும் தயாராகி வருகிறார்களாம்.. மேலும் இதன் பிரதிபலன் வரவுள்ள தேர்தலில் எதிரொலிக்கலாம் என்ற எச்சரிக்கை மணியும் மலராத கட்சிக்கு அடிக்கப்பட்டுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.