Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாஜிக்கு ‘செக்’ வைக்கும் மற்றொ மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்கியடிக்கப்பட்டதை இனிப்பு வழங்கி தூக்கலா கொண்டாடி மகிழ்ந்தாங்களாமே காக்கிகள் எங்கேயாம்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘அல்வா மாநகரில்தான் அந்த கொண்டாட்டமாம்.. அங்கு பணிபுரிந்து வந்த காவல் இளம் உதவி அதிகாரி ஒருவர் பிரிந்து உதயமான புதிய மாவட்டத்திற்கு மாற்றப்பட்டிருக்காராம்.. போலீஸ் அதிகாரியாக இருந்தாலும்கூட அவர் ஆய்வு நடத்தச் செல்லும் காவல் நிலையங்களில் ஆண், பெண் காவலர்களை ரொம்பவே தரக்குறைவாக நடத்தினாராம்.. ஒருமையில் பேசுவாராம்..

இளம் போலீஸ் அதிகாரியாச்சே... சீருடை துறையல்லவா..... என அனுபவம் நிறைந்த போலீஸ்காரர்கள் பலரும் பொறுத்துக்கொண்டாங்களாம்.. ஆனாலும் அவர் கையும் சுத்தம் கிடையாதாம்... கறை படிந்த இவர் நம்மை இப்படி பேசுகிறாரேனு போலீசார் மவுனமாக இருந்திருக்காங்க.. எனினும் அவர் மீதான புகார் காக்கி தலைமையை எட்டியதாம்.. இதனால் அவரை தூக்கியடித்து விட்டாங்களாம்.. அப்பாடா.....என நிம்மதி பெருமூச்சு விட்ட அல்வா மாநகர போலீசார் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேனிக்காரரிடம் பிரிந்து இலை கட்சிக்கு வந்த மாஜி அமைச்சருக்கு மற்றொரு மாஜி அமைச்சர் செக் வைக்க முடிவு பண்ணிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் மாவட்ட செயலாளராக இருக்க கூடிய மாஜி அமைச்சரான ‘மணியானவருக்கு’ இணையாக மற்றொரு மாஜி அமைச்சரான தேனிக்காரரிடம் இருந்து பிரிந்து சமீபத்தில் சேலத்துக்காரர் பக்கம் வந்த இவர், கட்சியில் தொண்டர்களை சந்திப்பது, கட்சியின் மேலிடத்தில் நெருக்கம் காட்டுவது உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.. இது மணியானவருக்கு கடும் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளதாம்... இதில் அவருடன் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், அவரது நடவடிக்கை மணியானவருக்கு பிடிக்கவில்லையாம்.. இதனால் அவருக்கு ஏதாவது ஒரு வழியில் செக் வைக்க மணியானவர் அவரது நெருங்கிய ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளாராம். கட்சியில் திரைமறைவில் இருந்து வந்த மாஜி அமைச்சர்களுக்குள்ளான மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக மாவட்டம் முழுவதும் பரபரப்பா பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அனுமதியே பெற முடியாத இடத்திற்கும் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதால ஏழை ஜனங்க மாட்டிக்கிட்டு முழிக்குறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பதிவு ஆபிஸ்னாவே பிரச்னை, பிரச்னைனு சொன்னாேல அது பதிவு ஆபிஸ் என்ற மாதிரி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போகுதுன்னு புகார் சொல்றாங்க.. குறிப்பாக கிரிவல மாவட்டம், ஆறு அணி நகர்ல தான் நிலைமை இப்ப மோசமா இருக்குதாம்.. ஆறு அணி பதிவு ஆபிஸ்ல தன்னோட பெயர்ல மணியை கொண்டவரு நீர்நிலை, நீர்வரத்து கால்வாய், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம்னு எல்லாத்தையும், சில ரியல் எஸ்ேடட் நபர்கள், ரிடையர்ட் ஆபிசர்கள், ரைட்டர்னு ஒரு கூட்டத்தை சேர்த்துகிட்டு, போலி ஆவணங்கள் மூலம் அனுமதியே பெறமுடியாத இடங்களுக்கும் முறைகேடாக பதிவு செய்றாங்களாம்.. இதுல ஆறு அணி வட்ட ஆட்சியர் ஆபிஸ்ல வருவாய் கணக்கு ஆவணங்கள்ல நீர்நிலை ஆக்கிரமிப்பு இடத்தை திருத்தம் செய்து கொடுத்திருக்காங்களாம் சில கவர்மென்ட் ஆபிசர்ஸ்.

இதுக்காக அந்த கூட்டத்தினர், ஆபிசர்களுக்கு சன்மானமாக வீடு, மனைன்னு வாரி கொடுத்திருக்காங்களாம்.. இந்த வேலைகளை கச்சிதமாக செய்து கொடுக்குறதுல கில்லாடியாக ஒரு ரைட்டர் இருக்காராம்.. அவருக்கு மண், பொன், சுற்றுலான்னு சகல வசதியும் செய்து கொடுத்து பக்கத்துலயே வெச்சிருக்காங்களாம்.. இதுல ஏதும் அறியாத ஏழை மக்கள், இவங்க கிட்ட இடத்தை வாங்கிட்டு சிக்கல்ல மாட்டிக்கிட்டு தவியாய் தவிக்குறாங்களாம்.. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிங்க, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்னு பாதிக்கப்பட்டவங்களும், விஷயம் தெரிஞ்சவங்களும் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நிதி நிறுவன பண மோசடியில் தங்களுக்கு கிடைத்த பணத்தை சுருட்டிய மலராத கட்சி நிர்வாகிங்க பீதியில் இருக்காங்களாமே.. எனக் கேட்டார் பீட்டர் மாமா.‘‘வட மாநில நதி பெயர் கொண்ட தொகுதிக்கான எம்பி தேர்தலில் மலராத கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் நிதி நிறுவன பண மோசடி வழக்கில் கைதாகி இருக்கிறாரு.. அவர் நடத்திய நிறுவனங்களில் தொடர் ரெய்டு நடந்துக்கிட்டு இருக்கு.. இவர் தேர்தலில் போட்டியிட்டபோது தன்னுடைய தொகுதியில் பணத்தை தண்ணீராக செலவழித்தாராம்... தனது தொகுதி மட்டுமின்றி, பக்கத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட மலராத கட்சி மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் இவர்தான் கரன்சிகளை அள்ளி வழங்கியிருக்கிறாரு..

தேர்தலில் இவரது டெபாசிட்டை காப்பாற்றியதே பெரும்பாடான நிலையில், கொடுத்த பணத்தையெல்லாம் கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுருட்டிட்டாங்கனு கொந்தளிப்பில் இருந்தாரு.. தற்போது இவர் கைதான நிலையில் இவரிடம் இருந்து பணம் சுருட்டிய நபர்கள் தங்களுக்கு ஏதும் பிரச்னை வந்து விடுமோனு பயந்துபோய் இருக்காங்களாம்.. தனக்கு தேர்தல் வேலை பார்க்காமல் பணத்தை சுருட்டியவங்க மேல் ஏற்கனவே கடுப்பில் இருக்கும் வேட்பாளரானவர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி போலீசில் போட்டுக்கொடுத்து பழிவாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதுதான் தொகுதி முழுவதும் இப்போது பேச்சாக இருக்காம்...’’ என்று முடித்தார் விக்கியானந்தா.