Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தொகுதியில் வீட்டை காலி செய்து ஏமாற்றத்துடன் திரும்பிய மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஏறுகிற நண்டின் காலைப் பிடித்து இறக்குகிற நண்டின் கதை மலராத கட்சியில் தொடர்ந்து நடந்துட்டு இருக்காமே..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. மலராத கட்சியில் யாருக்காவது ஒரு பொறுப்பு கொடுத்ததுமே, அந்த பதவிக்கு எதிர்பார்த்திருந்துக் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்தால், பொறுப்பு அறிவிக்கப்பட்டவரின் கடந்த காலத்து வழக்குகளை தேடிப்பிடித்து தலைமைக்கு அனுப்பி, தலைசுற்ற வைப்பதில் அதீத ஆர்வம் காட்டுவது தொடர்கதை ஆகி வருகிறது.

குறிப்பாக தூங்கா நகருக்கு அறிவித்த மலராத கட்சியின் ஒரு பிரிவு மாநில நிர்வாகி மீது 2016ல் புறநகர் காவல்நிலையத்தில் ஒரு பாலியல் குற்றவழக்கு இருப்பதை தேடிப்பிடித்து எடுத்து தலைமைக்கு அனுப்பியதோடு, சமூக வலைத்தளங்களிலும் முடிந்த அளவுக்கு இதனை பரப்பி முடித்து சிலர் ஆறுதலடைந்துள்ளனர். கட்சிக்குள் பொறுப்பில் அமரவைக்கிறவர்களில் அதிகம் பேருக்கு கடந்த காலத்து வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம். அதேசமயம், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்த குற்றத்தகவல்கள் எது வந்தாலும் தலைமையில் இருப்பவர்கள் கண்டுகொள்ளாதது, கட்சி வளர்ச்சியில் ஆர்வம் காட்டுகிற மலராத கட்சித் தொண்டர்களுக்கு பெரும் மன அதிருப்தியை, அதிர்ச்சியை தந்து வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அந்த தொழிலதிபரின் சோக கதையை சொல்லுங்க..’’ என அடுத்த மேட்டருக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘மெடல்நகர் தொகுதியில் மாஜி எம்எல்ஏவாக இருந்த இலைக்கட்சியைச் சேர்ந்த மாஜி மந்திரியான தொழிலதிபர், இங்கிருந்து தலைநகரிலுள்ள மூன்றெழுத்து தொகுதிக்கு மாறினார். அங்கு கடந்த முறை வெற்றி கிடைக்காததால் இந்த முறை தனது பார்வையை மீண்டும் மெடல் நகர் தொகுதி பக்கமாய் திருப்பினார். கடந்த ஓராண்டுக்கு மேலாக மெடல் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து அவ்வப்போது வந்து போனவர், தான் வரும்போதெல்லாம் ெதாகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சி மற்றும் கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழையா விருந்தாளியாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால், இவர் தேர்தலை மனதில் வைத்து தான் இந்த வேலையை பார்ப்பதாகவும், பதவியில் இருந்தபோது கட்சியினர் யாரையும் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் காதில் கேட்குமளவிற்கு கமெண்ட் அடித்தார்களாம். இதனால், அவர் பின்னால் கட்சியினர் யாரும் செல்லாத நிலையில் தவிப்பான மனநிலையில் இருந்தார். இதற்கு மாவட்ட பால்வள மாஜியும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர். இந்த சூழலில் சேலத்துக்காரர் மெடல் மாவட்ட பிரசார பயணத்திற்கு வந்தபோது, இவரை பெயரளவுக்கு கூட கண்டுகொள்ளவில்லையாம். இதனால், இனி இங்கு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவிற்கு வந்த தொழிலதிபர், வீட்டில் வேலை பார்த்தவர்களை வேலையை விட்டு அனுப்பிவைத்த கையோடு, வீட்டை காலி செய்துவிட்டு இங்கிருந்து பெட்டி, படுக்கைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் தலைநகருக்கே கிளம்பி விட்டாராம். வந்தால் மெடல் நகர் தொகுதிக்கான சீட்டோடு தான் வருவேன் என சபதமிட்டு சென்றுள்ளாராம்....’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவர் ரொம்பவே சோகமாக இருக்காராமே.. ஏன்’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெல்லிக்கு போயிட்டு வந்த பிறகு ரொம்பவே அப்செட்டாகத்தான் இருக்காராம்.. ஊரைமாற்றப்போறேன்று ஒரு பயணத்தை தொடங்கி நடத்திக்கிட்டு வருவதிலும் ஒரு காரணம் இருக்குதாம். வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் போட்டியிடும் இடத்தை தேர்வு செஞ்சி முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கியதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள இல்லத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி ஒன்று நடந்துச்சாம்.

அதிலும் அவர் ரொம்பவே கடுகடுப்பாக கோபமாகத்தான் இருந்ததாக கட்சிக்காரங்க சொல்றாங்க. இம்முறை சிரித்துக்கொண்டே டெல்லி உள்துறை கடும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் பரவிக்கிட்டு வருது. இதனால் அவர் கடும் நெருக்கடியில் இருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க. இதற்கிடையில் அவரது சொந்த ஊரில் கட்சிக்காரங்க பிரச்னை பூதாகரமாகிகிட்டு வருதாம். தொண்டர்களுக்கு போதிய மரியாதை கிடைக்கலைன்னு உறுப்பினர் அட்டையை தெருவில் வீசிட்டாங்களாம். அதே போல மகளிரணி பிரச்னை தீயா பரவிக்கிட்டு இருக்காம்.

மகளிரணி செயலாளர் கட்சிக்காக எந்த வேலையும் செய்யாமல், எனக்கு இலைக்கட்சி தலைவரை தெரியும், மம்மி காலத்தில் இருந்தே நான் இருக்கேன்னு சொல்லிக்கிட்டிருக்காங்களாம். இதனால அவரை தூக்கினால் கட்சிக்கு நல்லதுன்னு ஒரு தரப்பு கோஷம் எழுப்பிக்கிட்டிருக்காம். இவ்வாறு காலியாகும் இடத்தை கவ்வி பிடித்திடணும் என்று 5 லேடீஸ் வேகம் காட்டுறாங்களாம். எந்த நேரமும் மகளிரணி செயலாளர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவிக்கிட்டிருக்காம். இந்த விவரமும் இலைக்கட்சி தலைவரின் காதுக்குபோயிருக்கு. ஆனால் மகளிரணியை தொடவேண்டாம், என சொல்லிட்டாராம். இந்த விவரம் தெரியாமல் போட்டி பட்டியலில் இருப்போரை நிர்வாகி ஒருவர் உசுப்பேத்திக் கிட்டிருக்காராம். இந்த விவகாரத்தை தெரிந்தவர்கள் கமுக்கமாக சிரிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒன்றிய நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருதாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெய்வேலியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது. பொதுத்துறையின் நகர நிர்வாகம் அலுவலகம் கீழ் செயல்படும் எஸ்டேட் பிரிவில் இருக்கும் அதிகாரிகள் துணையுடன் மர்ம நபர்கள் விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்துகின்றனர். இதற்கு ஒன்றிய அதிகாரிகள் ஆதரவாக இருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் ஒதுக்கீடு செய்யும் கடைகள், குடியிருப்பு வீடுகளில் பல்வேறு முறைகேடு நடப்பதாகவும் கூறப்படுகிறது. தோட்டக்கலை பிரிவில் உள்ள மரம் மற்றும் செடிகளுக்கு உரம் வாங்கியதில் மெகா ஊழல் நடப்பதாகவும். இதற்கு பொய்யான கணக்குகளை சமர்ப்பித்து லட்சக்கணக்கில் அதிகாரிகள் முறைகேடுகள் செய்ததாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் பரவி வருகிறது.

இது போன்ற நபர்களால் ஒன்றிய நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் போன்ற இடங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணிகளை ஒன்றிய நிறுவனத்திற்கு வீடு நிலம் வழங்கிய நபர்களுக்கு வேலை வழங்காமல் ஒப்பந்ததாரர்கள் உயர் அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு வெளி நபர்களுக்கு வேலை வழங்கி வருகின்றனர். இது போன்ற முறைகேடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய என்எல்சி விஜிலென்ஸ் அதிகாரிகள் மவுனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் நிறுவன ஊழியர்கள்’’ என்றார் விக்கியானந்தா.