Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாஜி அமைச்சர் பாலத்துல பவனி வந்ததுக்கு காரணம் இதுதான் என்கிறார்: wiki யானந்தா

‘‘மிக நீண்ட மேம்பாலத்தை சொந்தம் கொண்டாட இலை கட்சி வேண்டாத வேலையெல்லாம் ெசஞ்சு மக்கள் வெறுப்புக்கு உள்ளாயிருக்கு போல..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கோவையில் கடந்த 9ம் தேதி தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமைகொண்ட ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இது, முழுக்க முழுக்க திமுக அரசின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட மெகா திட்டம் என்பதை ஊரறியும். ஆனால், இப்பாலத்திற்கு அதிமுகவினர் சொந்தம் கொண்டாடியுள்ளது, கோவையில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த பாலத்தை நாங்கள்தான் 50 சதவீதம் கட்டினோம் எனக்கூறிக்கொண்டு, மணியான மாஜி அமைச்சர், மறுநாள் பெரும் படையை கூட்டிக்கொண்டு இப்பாலத்தின் மீது பயணித்தார். அவ்ளோதான், மொத்தமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது. பாலத்தில் துவங்கிய இந்த நெரிசல், ஒட்டுமொத்த மாநகரம் முழுவதும் பரவியது.

இப்படி திடீரென கூட்டத்தை கூட்டி, மக்களை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என கட்சியின் மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாம்... அத்துடன், மாஜி அமைச்சருடன் யார் யார் அணிவகுத்து வந்தார்கள் என்ற பட்டியலும் கட்சியின் தலைமைக்கு வேண்டும் எனவும் கேட்டுள்ளார்களாம். அதனால்தான் இந்த கூட்டமாம்... இது எல்லாவற்றையும்விட, யார் யார் ஆஜரானார்களோ, அவர்களுக்கு வரும் தேர்தலில் தனி கவனிப்பு இருக்கும்... என்றும் கூறிவிட்டார்களாம். இந்த உண்மை தெரிந்ததும், மிஸ் பண்ணுன சில விழுதுகள், அய்யோ... நாம போகாம விட்டுட்டோமே... என அழுது புலம்புறாங்களாம்.., வட போச்சே....ன்னு இன்னொரு குரூப் ரொம்பவே பீல்... பன்னுதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நானும் ரவுடிதான்னு வடிவேல் பாணியில் ஒரு அரசியல்வாதி ரவுசு கிளப்புனாராமே.. என்னா விஷயம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகரின் இலைக்கட்சி மாஜிகள் இருவருடன், செல்லமானவர் என மும்மூர்த்திகளும் தலைமையைக் கவர்ந்திட போட்டி போட்டுக் கொண்டு பேட்டிகள், அறிக்கைகள், போராட்டங்களை அதிகரித்திருக்கின்றனர். இதில் மாஜியான உதயமானவர், தன் பகுதியின் குவாரி அனுமதியை ரத்து செய்திடக்கோரி மறியலில் களமிறங்கினார். எங்கெங்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ, அங்கு ஆஜராகி தேவையற்ற பரபரப்பை கூட்டுகிறார். இதைக்கண்ட செல்லமானவரோ, தானும் ஏதாவது செய்ய ஆசைப்பட்டு, எதுவும் அமையாததால் மண்டை காய்ந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தன் தொகுதியில் கட்சித் தலைவர் சிலை சேதப்பட்டதை அறிந்து, இதற்கு முன் இல்லாத அளவில் ஆதரவாளர்கள் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தார். போலீஸ் இவரைக் கைது செய்வதில் கவனம் செலுத்தாததால் மறியலில் களமிறங்கினார். தன்னையும் வடிவேலு பாணியில் ‘நானும் போராளிதான்... நானும் போராளிதான்...’ என்று கூறிப் பார்த்தார். அப்படியும் காவல்துறை கண்டு கொள்ளாததால் செல்லமானவர் கலங்கிப்போனாராம். போலீசிடம் வலுக்கட்டாயமாக தங்களை கைது செய்ய வலியுறுத்தியதால், வேறு வழியின்றி போலீசும் மண்டபத்திற்கு கொண்டு வந்து இருக்கச் செய்து, 11 மணிக்கெல்லாம் கிளம்பும்படி சொன்னார்களாம்.

ஆனாலும், அங்கேயே தங்கி இருந்து, தாங்கள் கைதானதை தலைமைக்குத் தெரிவித்து, ‘அறப்போராட்டம் வெல்லட்டும்’ என்று தலைமையான சேலத்துக்காரரின் வாழ்த்துகளையும் வாங்கிய பிறகே மாலை 4மணிக்கே அங்கிருந்து வெளியேறினராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புல்லட்சாமிக்கு ஏன் இவ்வளவு எரிச்சலாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜேசிஎம், மக்கள் மன்றம் மூலம் 10 தொகுதிகளை குறி வைத்து மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வருவது, புல்லட்சாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூடிக்கிடக்கும் ஏஎப்டி மில்லை திறப்பேன், 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பேன், என்னிடம் மில்லை கொடுங்கள் எனக் கூறியது, துணைநிலை ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தது என ஆளும் தேஜ அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம். இதற்கிடையே மின்துறை ஊழியர்கள் முதல்வரை சந்தித்தபோது, மின் துறையை தனியார் மயம் ஆக்காதீர்கள் என வலியுறுத்தினர். அதற்கு புல்லட்சாமி, ஒருத்தன் மின்துறையை கேட்கிறான். இன்னொருவன் பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்து மில்லை கேட்கிறான்.

புதுச்சேரி என்ன விற்பனைக்கு என பெயர் பலகையா வைத்திருக்கிறது என எரிச்சலுடன் கேட்டாராம். மண்டபம் புக் செய்து தினமும் மக்களுக்கு சோறு போட்டுவிட்டால், ஜெயித்து ஆட்சியை பிடிக்க முடியுமா எனக் கூறினாராம்.

அதன் பிறகு, பாஜ தலைவர் மற்றும் ஒரு அமைச்சரிடம், என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது, ஜேசிஎம் என்ற பெயரில் அரசியல் செய்வதை ஜனவரிக்குள் முடிக்க வேண்டுமென ஷாவிடம் சொல்லுங்கள், இல்லாவிட்டால் என்வழி, தனிவழி, நான் பார்த்துக்கொள்கிறேன். நவம்பர் மாதம் புதுச்சேரி விடுதலைநாள் கொடியேற்றிவிட்டு, நான் வீட்டுக்கு போகிறேன், நீங்க பாத்துக்குங்க என புல்லட்சாமி கடிந்து கொண்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கவனிப்பு இருந்தால் தான் பில்கள் நகருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்ட தலைநகர அலுவலகத்தில் நகரில் பணிகள் முடித்த ஒப்பந்ததாரர்களின் பில்கள் அதற்கான செக்‌ஷனில் பாஸ் செய்யப்படுமாம். ஆனால், அந்த செக்‌ஷனில் கடந்த 3 ஆண்டுகளாக பில்கள் ‘கவனிப்பு’ இருந்தால்தான் நகருகிறதாம்.

கவனிப்பவர்களின் பில்கள் வைக்கப்பட்ட பைல்கள் மேலேயும், மற்றவர்களின் பைல்கள் நிறுத்தியும் வைக்கப்படுகிறதாம். இதனை அங்குள்ள தாமரையின் சமஸ்கிருத பெயருடன் இணைந்த நாதமானவர்தான் செய்கிறாராம். இந்த கவனிப்பு பணியை செய்வதற்கென்றே அவர் என்எம்ஆர் ஒருவரை தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளாராம். இந்த நிலையில்தான் ‘டிஎம்ஏ’ அதிகாரி சென்னையில் இருந்து வரும் தகவல் அவருக்கு கிடைத்து, இரவோடு இரவாக பெண்டிங் பைல்களை சரியாக்கி தனது மேஜை மேல் வைத்துக் கொண்டாராம். அவர் சென்றதும், பெண்டிங் பைல்கள் அவரது மேஜை டிராயரில் தஞ்சமடைந்து கொண்டதாம். இதை அறிந்த ஒப்பந்ததாரர்கள் கொதித்து, சென்னையில் தங்கள் லாபி மூலம் தலைமை செயலகத்தில் புகாராக தெரிவிக்க உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. 