Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிரியர்கள் தினத்தையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து!

சென்னை: மாணவச் சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சிறந்த ஆசிரியராக பணிபுரிந்து, இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்து, ஆசிரியர் பணிக்கு பெருமை தேடித் தந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் நாளை நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்." என்கிறார் திருவள்ளுவர். கற்றவரே கண் உடையவர்.

கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர் என்பது இதன் பொருள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை மாணவ மாணவியருக்கு அளிப்பவர்கள் ஆசிரியப் பெருமக்கள். ஆசிரியர் பணி என்பது தன்னலமற்ற சேவைகளில் ஒன்றாகவும், கண்ணியமிக்க பணியாகவும், நற்பண்புகளை போதிக்கும் தொழிலாகவும், ஏழைகளை ஏற்றிவிடும் ஏணியாகவும் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. “ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வி அவனது ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வந்து உதவும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், பள்ளிகளின் கட்டமைப்புகளை உயர்த்தி, ஆசிரியர் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி, அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கி, தரமான கல்வியை கட்டணமில்லாமல் அனைவரும் பெற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழிவகை செய்தார்கள்.

இதனால் மாணவச் சமுதாயம் ஏற்றமடைந்தது. ஆசிரியர்களின் வாழ்வு மேம்பட வேண்டும், மாணவர்களின் கல்வித் தரம் உயர்வடைய வேண்டும் என்று நாம் அனைவரும் இந்த நாளில் உறுதி ஏற்போம். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டு, மாணவச் சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.