புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சனாதன தர்மம் மற்றும் விஷ்ணு சிலை தொடர்பான பொதுநல வழக்கில் நீதிபதி தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தினால், அவரது வழக்கறிஞர் உரிமம் பார் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இருப்பினும், அவர் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், நேற்று டெல்லி கர்கர்டூமா நீதிமன்ற வளாகத்திற்கு வந்த ராகேஷ் கிஷோரை, சுமார் 100 முதல் 150 பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. முன்னாள் தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், அந்தக் கும்பல் அவரை செருப்பால் சரமாரியாகத் தாக்கியது. தாக்குதலின்போது தற்காத்துக்கொள்ள முயன்ற ராகேஷ் கிஷோர் கூச்சலிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முன்னாள் தலைமை நீதிபதி விவகாரத்திற்காகவே என்னை தண்டிக்கிறோம் என்று கூறி அவர்கள் தாக்கினார்கள். பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அந்தக் கும்பலிடமிருந்து பத்திரமாக என்னை மீட்டனர். இருப்பினும், இந்த சம்பவம் வழக்கறிஞர்கள் இடையிலான உள்விவகாரம் என்பதால் காவல் துறையில் புகாரளிக்க விரும்பவில்லை’ என்று ராகேஷ் கிஷோர் கூறிவிட்டார்.


