அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் வீட்டில் புலனாய்வு துறை விசாரணை: இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் முந்தைய ஆட்சியின் போது கடந்த 2018 முதல் 2019 வரை டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவர் ஜான் போல்டன். 2020ம் ஆண்டு அவர் எழுதிய த ரூம் வயர் இட் ஹேப்பென்ட் புத்தகத்தில் ரகசிய தகவல்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். புத்தகம் வெளியிடுவதைத் தடுக்க டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். அண்மையில் அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஜான் போல்டன் பேட்டியளிக்கையில் ,இந்தியாவிற்கு எதிரான வரிகள் மூலம் ரஷ்யாவை காயப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இது இந்தியாவை ரஷ்யாவுடனும், சீனாவுடனும் நெருக்கமாக கொண்டு சென்று, இந்த வரிகளை எதிர்க்க வைக்கலாம்.
ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக சீனாவுக்கு டிரம்ப் சலுகை காட்டுவது, இந்தியா மீது வரி விதிப்பது ஒரு பெரிய தவறு. இது அமெரிக்காவிற்கு முற்றிலும் எதிர் விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேரிலேண்டில் உள்ள ஜான் போல்டனின் வீட்டில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.அமெரிக்க புலனாய்வு பிரிவு இயக்குனர் காஷ் படேல் உத்தரவின்படி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ் படேல் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.எப்பிஐ அதிகாரிகள் பணியில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.