Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

30 ஆண்டு கால உழைப்பு வீணாக போகுது; இந்தியாவுடனான உறவை சீரழிக்கும் டிரம்ப்: முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கடும் தாக்கு

வாஷிங்டன்: அமெரிக்காவின் தவறான வரிக் கொள்கைகளால் இந்தியாவுடனான உறவு சீர்குலைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை அபராத வரி விதித்தது. மேலும், இந்தியாவின் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் சபஹார் துறைமுகம் மீதான தடைகளையும் விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டது. இதேபோல், இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் எச்-1பி நுழைவு இசைவுக்கான கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தியது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சூசன் ரைஸ், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறுகையில், ‘இரு கட்சிகளைச் சேர்ந்த அரசுகளும் கடந்த 30 ஆண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த இந்திய-அமெரிக்க நட்புறவை, டிரம்ப் நிர்வாகம் சீர்குலைத்துவிட்டது. இது கொள்கை சார்ந்த முடிவு என்பதை விட, தனிப்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்தியா போன்ற பெருமையும் வலிமையும் வாய்ந்த ஒரு நாட்டை புறந்தள்ளினால், அது ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் நெருக்கமாகும் அபாயம் உள்ளது.

இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார். சூசன் ரைஸின் இந்தக் கருத்துகள், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சூசன் ரைஸின் இந்தக் கருத்துகளுக்கு இந்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், சபஹார் துறைமுகம் மீதான தடை விலக்கின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.