முறைகேடு, விதிமீறல் புகார் கோவை பாரதியார் பல்கலை. மாஜி பதிவாளர் சஸ்பெண்ட்: தலைமையகத்தை விட்டு வெளியேற தடை
கோவை: முறைகேடு, வீதிமீறல் புகாரை தொடர்ந்து, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ரூபா குணசீலன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், தலைமையகத்தை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் 9 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால், துணைவேந்தர் பணிகளை துணைவேந்தர் பொறுப்பு குழு கவனித்து வருகிறது. இதையடுத்து, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளராக ரூபா குணசீலன் பொறுப்பு பணியில் இருந்து வந்தார். இவர், பதிவாளர் பணி மட்டுமின்றி பல்கலை.யின் நிதி அதிகாரி, ரூசா நிதிகளின் இயக்குனராகவும் பொறுப்பு பணியில் இருந்தார். பதிவாளர் ரூபா குணசீலன் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.
பதிவாளரின் நடவடிக்கையால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் சுமூகமான செயல்பாடுகள் சீர்குலைந்து இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதனை தொடர்ந்து பாரதியார் பல்கலை.யின் வேந்தர் மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பதிவாளர் ரூபா குணசீலன் தொடர்பான புகார்களை விசாரிக்க சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பார்த்தசாரதியை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இவர், பதிவாளர் மீதான புகார்களை விசாரித்து தனது விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆகஸ்டில் புதிய பதிவாளராக ராஜவேல் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, ரூபா குணசீலன் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் சிண்டிகேட் மற்றும் நிதி குழுவின் ஒப்புதல்கள் இல்லாமல் மறுநியமனங்கள் செய்ததாகவும், பல்கலை.யின் நடைமுறைகள் மற்றும் சட்டங்கள், விதிகளை மீறியதாக நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த பணியிடை நீக்கத்தை தொடர்ந்து, அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் தலைமையகத்தை விட்டு வெளியில் செல்ல கூடாது என துணைவேந்தர் பொறுப்பு குழு உத்தரவிட்டுள்ளது.

