மாஜி போலீஸ்காரர் எல்லா பக்கமும் சொத்து வாங்கி போட்டிருக்கும் தகவல் வெளியாகி வயிற்றில் புளியை கரைப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பைக்கை காணவில்லை என்று புகார் கொடுத்த வக்கீலுக்கு ஹெல்மெட் போடாததற்கு அபராதம் விதித்து அதிர்ச்சி கொடுத்துட்டாமே காக்கி..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘பனியன் சிட்டியில் வக்கீல் ஒருவரோட பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போயிருக்கு.. பல இடத்துல தேடியும் பைக் கிடைக்காததால அந்த வக்கீல் தெற்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்க போயிருக்காரு.. ஆனா அங்க இருந்த போலீஸ் க்ரைம் பிரிவில் புகார் கொடுக்கணும், சிசிடிவி புட்டேஜ் வேணும்னு அலைக்கழிச்சிட்டே இருந்திருக்காங்க..
வேறு வழியில்லாம சிஎஸ்ஆர் மட்டும் போட்டு கொடுத்து அனுப்பிட்டாங்களாம்.. அதுக்கு பிறகு அந்த வண்டிய கண்டுபிடிக்க போலீஸ் எந்த முனைப்பும் காட்டலையாம்.. இந்த சூழலில் வண்டியை பறிகொடுத்த வக்கீலின் செல்போனுக்கு பனியன் சிட்டி வடக்கு போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கு.. அதாவது ஹெல்மெட் போடாம பைக் ஓட்டியதற்காக அபராதம் கட்டணும்னு வந்திருக்கு.. இதை பார்த்த வக்கீல் அதிர்ச்சியடைந்தாராம்.. அதோடு காணாம போனதா புகார் கொடுத்த தெற்கு ஸ்டேசன் க்ரைம் பெண் இன்ஸ் கிட்ட போய் கேட்டு இருக்கிறார்..
அதற்கு அந்த இன்ஸ் அபராதம் போட்டா கட்ட வேண்டியது தானே என்று சொன்னாராம்.. வண்டிய எப்ப கண்டுபிடிச்சி தருவீங்கன்னு கேட்டதற்கு கிடைக்கும்போது கொடுப்போம்னு பதில் வந்துச்சாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுப்புது அணிகள் வரவால் யூனியனில் புல்லட்சாமிக்கு போட்டியாக டபுள் தொகுதியில் போட்டிப்போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் போகுதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் மலராத கூட்டணி ஆட்சி நடக்கிறது..
புல்லட்சாமி அமைச்சரவையில் புதியவரான முழம்குமாருக்கு 3 மாதமாகியும் இலாகா ஒதுக்காததால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறாராம்.. இந்நிலையில் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறதோ என்ற ஐயம் புல்லட்சாமிக்கு வந்து இருக்காம்.. இதனாலோ என்னவோ சமீப காலமாக எந்தபிடியும் கொடுக்காமல் இலைமறை காயாக ஆட்சியை தள்ளி வருகிறாராம்.. கூட்டணி விவகாரத்தில் தனது கட்சி செயலர் மூலமாக சூசகமாக எச்சரிக்கை மணியை அடித்த புல்லட்சாமி கடந்த தேர்தலைபோல டபுள் தொகுதியில் களமிறங்க ஆலோசித்து உள்ளாராம்..
ஏற்கனவே லாட்டரி அதிபரின் மகனும் டபுள் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ஓட்டுகள் சிதறுவதால் வரும் தேர்தலில் டபுள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாம்.. புதிதாக முளைத்த பல அணிகள்தான் இதற்கு முக்கிய காரணமாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கல்லூரி வருது... கல்லூரி வருது...ன்னு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி அளித்து ஜெயிச்ச இலைக்கட்சி மாஜி தங்களது கட்சிக்காரங்களையே ஷாக்கடிக்க வச்சிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு புகழ் பெற்ற மாவட்டத்தின் நான்கு எழுத்து தொகுதியில் சமஉவாக மாஜி ஷாக்கடிக்கும் துறையை கவனித்தவர் உள்ளார். இவர் ஏற்கனவே இதே தொகுதியில் பல முறை சமஉவாகவும், மந்திரியாகவும் இருந்துள்ளார்.. இவர் ஒவ்வொருமுறை போட்டியிடும்போதும் அரசு கலைக்கல்லூரியை இங்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்க மட்டும் மறந்ததே இல்லையாம்.. ஆனால், அவர் மந்திரியாக இருந்தபோது கட்டாயம் கலைக்கல்லூரி வந்துவிடும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தாங்களாம்.. ஆனால், அவருக்கு வேண்டப்பட்டவர் தான் கல்லூரி ஆரம்பிச்சாராம்..
இதனால், தொகுதிக்குள் புகைச்சல் ஏற்பட்டதெல்லாம் பழைய கதை. தற்போது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுங்கட்சியினரின் முழு முயற்சியால், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் அரசுக்கு கொடுத்த 5 ஏக்கர் நிலத்தில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருது.. இது தனது முயற்சியால் தான் வந்தது என ஒரு கூட்டத்தில் மாஜி பேசியது அங்கிருந்த சொந்த கட்சிக்காரர்களையே ஷாக்கடிக்க வைத்துள்ளது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி போலீஸ்காரருக்கு எதிராக ரிலீஸ் செய்யும் உளவுத்துறை...
‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரர் ரொம்பவும் தடுமாற்றத்தில் இருக்காராம்.. காக்கிச்சட்டையை உதறி தள்ளிவிட்டு சிஎம் கனவில் அரசியலில் கால்பதித்தாராம்.. அதுவும் மலராத கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு பதவிகள் ஓடிவந்ததாம்.. கர்நாடகத்தில் நான் போலீசாக இருந்தபோது சுத்திய கம்புகள் ஏராளமுன்னு அள்ளிவிட்டுக்கிட்டே இருந்தாராம்.. ஒன்றியத்தில் மலராத கட்சி ஆட்சியில் இருப்பதால் அதிகாரிகள், மந்திரிகளை உருட்டி பல்வேறு தகவல்களை பெற்று இங்கு மிரட்டிக்கிட்டே இருந்தாராம்..
இதன்மூலம் அவர் பெரிய அளவில் துட்டு பார்த்ததாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. எனது கை ரொம்பவும் சுத்தமுங்கன்னு சொன்னதை நம்பி டெல்லி தலைமையே ஏமாந்துபோச்சாம்.. ரபேல் வாட்ச் விவகாரம் போய்கிட்டிருந்த நேரத்தில் சாட்டையால் தனக்கு தானே அடிச்சிக்கிட்டாராம்.. இதனை உத்துப்பார்த்த டெல்லி, இதே நிலை நீடித்தால் கட்சிக்கு நல்லதல்லன்னு ெராம்பவே கஷ்டப்பட்டுதான் தலைவர் பதவியை புடுங்குனாங்களாம்..
அதன்பிறகும் தலைமைக்கு பெரும் தலைவலியாகவே இருந்ததாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. என்றாலும் தனிக்கட்சி தொடங்கி ரூட்டை மாற்றிக்கிடலாமுன்னு முடிவு செஞ்சி, நடிகர் கட்சியுடன் பேசிக்கிட்டிருப்பதை தெரிஞ்சிக்கிட்ட டெல்லி பெரும் முட்டுக்கட்டையை போட்டிருக்காம்.. அதே நேரத்தில் நேர்மையாளருன்னு இருக்கும் பெயரை டெல்லி சுக்குநூறாக உடைக்கும் பணியில் ஈடுபட்டிருக்காம்..
ஆட்டுக்குட்டி வளக்கேன், அதில் கிடைக்கும் துட்டைவச்சி வாழ்கிறேன்னு சொல்லிக்கிட்டிருந்த நேரத்துல, எனது வீட்டு வாடகையை நண்பர்கள் கொடுக்காங்கன்னு சொல்லிய போது இப்படி ஒரு தலைவனான்னு எல்லோரும் அண்ணாந்து பார்த்தாங்களாம்.. ஆனால் அவர் பல கோடி செலவில் கோவை, கர்நாடகா என திரும்பும் இடமெல்லாம் சொத்தா வாங்கி போட்டிருக்கும் தகவல் இப்போது வெளியாகி வயிற்றில் புளியை கரைச்சிக்கிட்டிருக்காம்..
இவ்வளவு நாளாக வெளியே வராமல் இப்போது மட்டும் எப்படி வருதுன்னு கேட்டால், இதற்கு எல்லாமே ஒன்றிய உளவுபிரிவோட வேலை தானாம்.. எங்கெல்லாம் பதுக்கி வச்சியிருக்காரு என்பதை ஒவ்வொன்றா ரிலீஸ் செஞ்சிக்கிட்டே இருப்பாங்கன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க.. அவர் செய்யும் முதலீடுகள் எல்லாம் எந்த வழியாக வருது, அதற்கான சோர்ஸ் பற்றியும் விசாரணை நடந்துக்கிட்டிருப்பதாகவும் மலராத கட்சியின் அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


