முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் தங்களையும் கட்சி பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளனர். மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்பி.யுமான சத்தியபாமா, ஐ.டி பிரிவு செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம்ஜிஆர் அணி இணை செயலாளர் அருள் ராமச்சந்திரன், கோபி நகரச் செயலாளர் கணேஷ், பேரூராட்சி செயலாளர்கள் 6 பேர் உட்பட அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித்தனியாக கடிதங்களை எழுதி எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பினர்.
இதேபோன்று நம்பியூர் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் சுமார் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று கோபி நகர மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்து கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து அணி அணியாக அதிமுக தொண்டர்கள் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பொறுப்புகளை துறந்து வருகின்றனர்.