‘‘மலராத கட்சியில் பதவியில்லாதவர்களுக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டும் தனக்கு கிடைக்காததால் கதர் கட்சியின் எம்எல்ஏ பதவியை உதறிட்டு போனவர் அதிருப்தியில் இருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மவுண்ட் தலைவர் மாநில பதவியில் இருந்து மாற்றப்பட்ட நிலையில் கட்சியில் பதவியில்லாமல் ‘குரல்’ கொடுத்து வந்தவர்களுக்கு எல்லாம் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நேற்று முன்தினம் பதவி வழங்கப்பட்டு இருக்காம்.. ஆனால் கடைகோடி மாவட்டத்தில் கதர் கட்சியில் இருந்து வெற்றிபெற்று சமஉ ஆக மூன்றாவது முறையாக வலம் வந்தவர், சட்டமன்ற பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற சீட்டுக்காக கட்சி மேலிடத்திடம் கேட்டு அடம் பிடித்து கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்தார்.
அப்போதே மலராத கட்சியை சேர்ந்த சிலர் தனக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்து விட்டனர் என்று வேண்டியவர்களிடம் எல்லாம் புலம்பிவந்தாராம்.. இந்நிலையில் மலராத கட்சியில் மாநில தலைவர் மாற்றப்பட்டு அவருக்கும், மற்றவர்களுக்கும், புதிதாக கட்சியையே இணைத்தவருக்கும் என்று பத்தோடு பதினொன்றாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டபோதும் தனக்கு ஏதும் பதவி வழங்கப்படாததால் முன்னாள் கதர் கட்சியின் சமஉ கடும் அதிருப்தியில் உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவரின் பாரத்தை போக்கினாராமே ஒரு பேச்சாளர்..’’ என அடுத்த கேள்வியைப் போட்டார் பீட்டர் மாமா.
‘‘ரெய்டு அடிச்சிருவோம்னு மிரட்டியே, கூட்டணிக்கு இழுத்ததால், இலைக்கட்சி தலைவரின் முகத்தில் எப்போதும் துக்கம் ஒட்டிக்கிடக்காம். இந்த வேதனையோட சொந்த ஊருக்கு வந்தாராம் இலைக்கட்சி தலைவர். அவரை கட்சிக்காரங்க கோஷம் எழுப்பி வரவேற்றாங்களாம்.. அப்போது டிவி பேச்சாளர் ஒருவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்துல இலைக்கட்சி தலைவரை வானளாவ புகழ்ந்து தள்ளிட்டாராம்.. வாழும் காமராஜரே,, நாட்டுக்கு மோடி, ஸ்டேட்டுக்கு எடப்பாடி என சத்தம் போட்டு சொன்னாராம்...
இந்த வார்த்தையை கேட்டதும் வாய்விட்டு சிரிச்சாராம் இலைக்கட்சி தலைவர்.. இதனை பார்த்த தொண்டர்களும், கொடுத்த காசுக்கு மேல கூவிட்டாரேன்னு சொன்னதோடு, தலைவரின் மனசில் இருந்த பாரமெல்லாம் பஞ்சாய் பறந்து போச்சு என்று சொல்லிட்டு போனாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘உளறல் மாஜிக்களுக்கு எல்லாம் வாய்ப்பூட்டு போட்டுவிட்டார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தாமரையை இலையும், இலையை தாமரையும் சகட்டு மேனிக்கு கடந்த காலத்தில் விமர்சித்து இரு தரப்பு தலைவர்களும் பேசிய பேச்சுகள் தான் கூட்டணி அறிவிப்பிற்கு பிறகு, வலைத்தளங்களில் தற்போது மக்கள் பார்த்து ரசித்துச் சிரித்து நகைக்கிற காட்சியாக இருந்து வருகிறது.
தாமரைக் கூட்டணி குறித்து எதுவும் பேசக்கூடாதென தனது கட்சியினருக்கு இலைக்கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம். குறிப்பாக தூங்கா நகரத்து தெர்மோகோல், பூட்டு நகரத்து உளறல்காரருடன், மெடல் மாவட்டத்து மாஜி பால்வளத்திற்கும் வாயைத் திறக்க தடை உத்தரவாம். இருந்தாலும் போகுமிடமெல்லாம் இதுகுறித்தே கேட்கப்படுவதால், இவர்கள் பேட்டியை தவிர்த்து வருகின்றனர். தூங்கா நகரத்து தெர்மோகோல் செய்தியாளர்களைக் கண்டாலே அலறி அடித்து ஓட்டம் பிடிப்பதில்தான் குறியாய் இருக்கிறார்.
அத்தனை கூட்டத்திலும் தாமரையை, மலையானவரை அதிகம் விமர்சித்ததில் தெர்மோகோல்காரரே முதலிடம் பிடித்தவர். எனவே, நேற்று தூங்கா நகரில் கட்சி சார்பில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தவர், போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு தப்பிச் செல்ல முயன்றும் செய்தியாளர்கள் சுற்றி வளைத்தனர். ‘இங்கே குடிநீர், மோர், இளநீர், தர்பூசணி, பலா, கொய்யா, வெள்ளரிக்காய், ரோஸ்மில்க் தருகிறோம். பதனீர் நல்லது. அனைவரும் அருந்திச் செல்லுங்கள்’ என்றபடி நழுவியவரை விடாமல், ‘கூட்டணி?’ என்றதும், பெரும் பதட்டத்திற்கு ஆளானவர், ‘சேலத்துக்காரர் எதைச் செஞ்சாலும் வெற்றி.. வெற்றி.. வெற்றி’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உச்சரித்தபடி, அங்கிருந்து கழன்று தனது காருக்கு வேகநடை போட்டார்.
‘பதில் சொல்லத் தெரியாம, தப்பிக்கிறத பாரேன்’ என்று சக கட்சிக்காரர்களே கமென்ட் கொடுத்தது, அங்கிருந்தோர் காதுகளில் பலமாக விழுந்தது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சி தலைவர் பதவி போனதுக்கு வேறு காரணம் இருக்காமே...’’ என இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த மலையானவரை மாற்றி விட்டு, புதிய தலைவரை கட்சியின் மேலிடம் அறிவித்து விட்டது. இலைக்கட்சி கூட்டணிக்கு தடையாக இருக்கிறார் என்பதால், இந்த மாற்றம் என பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இந்த பதவி பறிப்பிற்கு வேறு காரணம் இருக்குனு இலைக்கட்சியை சேர்ந்த பெங்களூருகாரர் புது கதையை அவிழ்த்து விட்டிருக்காராம்.
அது என்னவென்றால், தமிழ்நாட்டுல நடந்த மலராத கட்சி கூட்டத்தில், தேசிய அளவில் தற்போது முதன்மை இடத்திலும், இரண்டாம் இடத்திலும் இருக்கும் விஐபிக்கள் கலந்து கொண்ட போது, அவர்களது பெயரை சொல்லும் போது வந்த கைத்தட்டலை விட, மலையானவர் பெயரை சொன்ன போது அதிகமாக சத்தம் வந்திச்சாம். இந்த சத்தம் தான், எங்கே எல்லோரையும் மிஞ்சி விடுவாரோ என, இலைக்கட்சி கூட்டணிக்கு ஒருங்கிணைந்து வரல என, ஒரு சப்பையான காரணத்ைத கூறி தூக்கி எறிந்து விட்டார்கள் எனக்கூறியிருக்காராம். இந்த காரணம் தான் நம்புகிற மாதிரியே இருக்குனு, மலராத கட்சியினரே பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் சிக்கி செல்வத்தை இழந்தவரை பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரி யூனியனில் புதுமையான மோசடிகள் சமீபகாலமாக நடந்தேறி வருகிறது. பழைய ஆட்சியர் அலுவலகம் அருகே கோ ப்ரீ சைக்கிள் எனும் பிரபல தனியார் நிறுவனத்தில் சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து நிர்கதிக்கு ஆனார்கள். இதன் எதிரொலியாக சோதனை நடத்தி சீல் வைத்து அமலாக்கத்துறை ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்தது. அப்போது சில முக்கிய ஆவணங்களும், காசோலைகளும் கைப்பற்றப்பட்டு சில வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.
சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், காக்கிகளும் பலர் இதில் முதலீடு செய்திருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாம். அதுகுறித்த விவரங்கள் அமலாக்கத்துறை கையில் உள்ளதாம். இவ்வழக்கில் முக்கிய புள்ளியை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீசும் அனுப்பப்பட்டு இருக்கிறதாம். இதில் செல்வமான ஒரு எஸ்பியும் லட்சக்கணக்கில் செல்வத்தை பறிகொடுத்து நிர்கதியாக நிற்கிறாராம். அவரது புலம்பல்தான் சோதனை வரை சென்றிருக்கிறதாம். சோதனை நடந்தாலும், ஏதோ மன வேதனையில்தான் செல்வம் புலம்பி வருகிறார்’’’ என்றார் விக்கியானந்தா.