Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாஜி மந்திரியின் திடீர் சுறுசுறுப்பை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி அமைச்சர் திடீர் ஆக்டிவால் ஆச்சரியத்தில் இருக்காங்களாமே நிர்வாகிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சர் மணியானவர் திடீரென ஆக்டிவாக இருந்து வருகிறார். தேர்தல் நெருங்கி வருவதால் தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறராம்... மாவட்ட முழுவதும் காலையில் ரவுண்ட்ஸ் சென்று வருகிறார். இதை பார்த்து கட்சியில் உள்ள நிர்வாகிகள் ஆச்சரியத்தில் இருக்காங்களாம். சில பகுதிகளுக்கு சென்று, தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையும் நடத்துறாரு.

தேர்தல் நெருங்கி வருவதால் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு எந்த அளவு உள்ளது என்பது குறித்தும் மணியானவர் தெரிந்து கொள்கிறார். தேர்தல் நெருங்குவதால், நிர்வாகிகளுக்கு செம கவனிப்பும் இருக்குமாம் என கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வார்டு பக்கமே எட்டிப் பார்க்காத அதிகாரி மேல ஏகப்பட்ட புகார் வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பிரியாணிக்கு பெயர் போன பேமஸ் ஆன ஊர்தான், 4 எழுத்து பெயர் கொண்ட ஊர். இந்த ஊர் நகர் ஆட்சி அலுவலகத்துல சுகாதார பிரிவு முக்கிய பிரிவாக இயங்கி வருது. இந்த பிரிவுல, பெயர்ல செல்வத்தை வெச்சிருக்குற அதிகாரி பணிபுரிஞ்சு வர்றாராம். இவர் மேற்பார்வையில, தூய்மை பணிகள் சரிவர நடக்குறதே இல்லைன்னு புகார்கள் வந்தாலும் கண்டுக்குறதே இல்லையாம். கவுன்சிலர்கள் பல முறை புகார்கள் சொன்னாலும், வார்டு பக்கம் கூட எட்டிப்பார்க்க மாட்டேங்குறாராம்.

அப்படி வந்து பார்த்தாலும் எந்த வேலையும் அங்க நடக்குறதில்லையாம். அலுவலகத்துல அவரை பார்க்குறதே அபூர்வமா இருக்குதாம். இப்படி மக்களும் கவுன்சிலர்களும் புகார்களை அடுக்கி வைக்குறாங்க. இதனால சம்மந்தப்பட்ட அதிகாரிங்க உண்மை நிலைய விசாரிச்சு, உரிய நடவடிக்கை எடுக்கணும்னு எதிர்பார்ப்பு எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகி மன உளைச்சலில் இருப்பது ஏன்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புரம் என முடியும் கடலோர மாவட்ட இலைக்கட்சியின் சாமி பெயர் கொண்ட மாவட்ட முக்கிய நிர்வாகி தான் பெரும் மன உளைச்சலில் தவியாய் தவிக்கிறார். தனது செல்வாக்கால் மேலிடத்தை அசைத்து தனது மனைவியை தூர் என முடியும் தொகுதியில் இரு முறை போட்டியிட வைத்தார். இரு முறையும் தோல்விதான் மிஞ்சியது. இதனால் வரும் தேர்தலில் மனைவிக்கு வாய்ப்பு கொடுக்க தலைமை யோசித்தால், அந்த வாய்ப்பை தனக்காவது மாற்றி விடவேண்டுமென தலைமையிடம் மன்றாடி வருகிறார்.

தூர் தொகுதியில் கணிசமான வாக்குகளை குக்கர் தரப்பினர் பிரிப்பதால், வெற்றி கிடைப்பதில் சிக்கல் என்பதை உணர்ந்தவர், மாவட்டத்தின் புரம் தொகுதியை கேட்கலாமென திட்டமிட்டார். ஆனால், அங்கு ஏற்கனவே மணியான டாக்டரானவர் துண்டை போட்டு காத்திருக்கிறாராம்... அவரை மீறி சீட் வாங்கி வெற்றி பெறுவது கடினம் என்பதால், திரு என மரியாதையுடன் துவங்கும் தொகுதியை குறி வைத்துள்ளார். இந்த தொகுதியை கேட்டு மாஜி எம்எல்ஏ ஒருத்தர் கோதாவில் குதித்துள்ளாராம்.

மாவட்டத்தில் ஒரு தனி தொகுதி போக, மீதமுள்ள 3 தொகுதிகளில் ஒன்று கூட தனக்கு கிடைக்காமல் போனால், தனது அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய் விடும் என பார்க்கும் தலைவர்களிடம் எல்லாம் சொல்லி புலம்பி வருகிறார். இதுதான் தற்போது மாவட்ட இலைக்கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கிப்ட் கிடைக்காத கவலையில இருக்கிறது யாரு..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் அரசியல் அடாவடிகளுக்கு பஞ்சமில்லை. வரவுள்ள பொதுத்தேர்தல் யூனியனில் புதுமையாக இருக்கும் என்ற தகவல் உலாவுகிறதாம்.

மிக விரைவில் கட்சித் தாவல்கள் அரங்கேறும் நிகழ்வுகளை காண முடியும் என்ற பேச்சுகள் அடிபடுகிறதாம். இது ஒருபுறமிருக்க ஒளி பண்டிகைக்காக வழக்கம்போல் 33 மக்கள் பிரதிநிதிகளுக்கும் ‘கிப்ட்’ வழங்க புல்லட்சாமி முடிவெடுத்தாராம். ஆனால் கடந்தாண்டு பட்டாசு பாக்ஸ் பாக்கியான 4 கோடி லகரத்தையே செட்டில்மென்ட் செய்யாமல் மாவட்ட நிர்வாகி திருப்பி அனுப்பியதால் இதை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாம்.

இதனால் சிட்டிங் பிரதிநிதிகள் கடும் அப்செட்டில் உள்ளார்களாம். மாவட்ட நிர்வாகியை சந்தித்து முறையிட்டாலும், வரவேண்டியவை வந்து சேர்வதற்குள் ஔி கொண்டாட்டம் முடிந்துவிடும் என்பதால் எதிர்பார்ப்புகளில் இருந்த பிரதிநிதிகளின் ஜால்ராக்கள் கவலையில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இடமாறுதல் வந்தும் நகராமல் இருக்கிறாராமே பெண் அதிகாரி..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புரம் என்று முடியும் மாவட்ட தலைநகர் தாலுகாவில் வருவாய் அதிகாரியாக வலம்வந்த கனிவான மொழி மீது அடுக்கடுக்கான புகார்களாம். இதனால் சமீபத்தில் வெளியான இடமாறுதல் உத்தரவில் இந்த பெண் அதிகாரி வனம் தாலுகாவுக்கு தூக்கி அடிக்கப்பட்டாராம். மாவட்ட நிர்வாகியின் உத்தரவு வெளியாகி ஒரு வாரமாகியும் அம்மணிக்கு நகர மனமில்லையாம். காரணம் தித்திக்கும் பண்டிகையின் வரவுதானாம்.

இதற்காக வர வேண்டியவரையும் வந்து விடாதபடி இழுத்தடித்து வருகிறாராம். கேட்டால் பண்டிகை நேரம்ப்பா... என சக அலுவலரிடம் புலம்புகிறாராம். இதனால் அடுத்த நிலை அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கிறார்களாம். ஏற்கனவே அம்மணி மீதான புகார்கள் மீது விசாரணை ஒருபக்கம் இருக்க, எதைபற்றியும் கவலைப்படாமல் உள்ளாராம். அப்படி எங்கிருந்துதான் அம்மணிக்கு ‘பவர்’ வருகிறது என்று மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.