முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தவான், சுரேஷ் ரெய்னாவின் ரூ.11.14 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி
புதுடெல்லி: ரூ.1,000 கோடிக்கும் அதிகமான தொகை சம்பந்தப்பட்ட சட்டவிரோத பந்தய தளத்துடன் தொடர்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லியில் உள்ள ரூ.4.5 கோடி மதிப்புள்ள தவானின் வணிக நிலத்தையும், ரெய்னாவின் ரூ.6.64 கோடி மதிப்புள்ள பரஸ்பர நிதியையும் பறிமுதல் செய்ய பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.சட்டவிரோத பந்தய தளங்களுடன் தவான், சுரேஷ் ரெய்னா தெரிந்தே ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. குற்ற வருமானத்துடன் தொடர்புடைய நிதியின் சட்டவிரோத மூலத்தை மறைக்க வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பணம் செலுத்துவதற்கு ஈடாக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
