டாக்கா: வங்கதேசத்தில் நில மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசினா பிரதமராக இருந்தபோது சட்டவிரோதமாக நில ஒதுக்கீடுகளை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஹசினா, அவரது சகோதரி ரெஹானா, இங்கிலாந்து எம்பியும் மருமகளுமான சித்திக் உட்பட 17 பேர் மீது ஜனவரி 13ம் தேதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணையின் அடிப்படையில் மார்ச் 10ம் தேதி போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் பிரதமர் ஹசினாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரது அவரது மருமகளான இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் சித்திக்கிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஹசீனாவின் சகோதரிக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 14 பேருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 17 பேருக்கும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு எதிரான 4வது ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


