பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016-2021 வரை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 571.30% சொத்து சேர்த்ததாக சத்யா பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சத்யா பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்யா, கணவர் பன்னீர்செல்வம் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சோதனை நடத்தினர். 17 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரிவித்தனர்.இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. விசாரணையின்போது திடீர் நெஞ்சுவலியால் சத்யா பன்னீர்செல்வம் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சத்யா பன்னீர்செல்வம், 2016ல் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதேபோல அவரது கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகரமன்ற தலைவராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம், காமராஜர் நகரிலுள்ள உள்ள பன்னீர் செல்வம் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சத்யா பன்னீர்செல்வமும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஆவணங்கள் சிக்கியது. இதன் அடிப்படையில், சத்யா பன்னீர்செல்வம் மீது நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம், காமராஜர் நகரிலுள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் 18ம் தேதி காலை 6 மணியளவில் 3 கார்களில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சத்யா பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகளில் 3 பேர் வெளியே வந்து காரில் இருந்த லேப்- டாப்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காலை தொடங்கிய சோதனை 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
சோதனையின்போது சத்யா பன்னீர்செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென அவர் மயங்கி விழவே அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பின்னர் டாக்டர் பரிந்துரையின்படி அவரை பாதுகாப்பாக கடலூர் தலைமை மருத்துவமனைக்கு காரில் ஏற்றி சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சத்யா பன்னீர்செல்வம் கடந்த 2016 முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பணியாற்றியவர். 2021ல் பொதுத்தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப்படாத நிலையில் அதிருப்தியில் கட்சியில் இருந்து விலகியிருந்தார். கடந்தாண்டு மீண்டும் அவரை அழைத்து மாநில மகளிர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சமீபகாலமாக கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவும், 2026 தேர்தலில் போட்டியிடும் வகையிலும் திடீரென எழுச்சியுடன் முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.