பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூர் கே.ஆர். நகரை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள்பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, தற்போதைய எம்.எல்.ஏ. ரேவண்ணா மற்றும் அவரது மனைவி பவானி ரேவண்ணா உள்ளிட்ட 9 பேர் மீது 2023 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய சிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு, 2,000 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். நீதிமன்றம் மே 2ம் தேதி விசாரணையை தொடங்கியது. இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் 180 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்ததை ெதாடர்ந்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஜூலை 30ம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதில் தீவிர ஆர்வம் நிலவுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும்.