Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடன.காசிநாதன் மறைவு தொல்லியல் துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடன. காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள். செப்புப் பட்டயங்கள். பழமையான சிற்பங்கள், நடுகற்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தமிழரின் தொன்மையை நிலைநாட்ட நமது திராவிட மாடல் அரசு ஆற்றி வரும் பணிகளுக்கு முன்னோடியாகப் பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.

வட்டெழுத்துக் கல்வெட்டுகளைச் சரளமாகப் படிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற திரு. நடன. காசிநாதன் அவர்கள் தமிழ்நாடெங்கும் வரலாற்றுக் கருத்தரங்குகளையும், கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளையும் நடத்திப் பல இளைஞர்களும் இத்துறையில் ஆர்வம் பெற உழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லெழுத்துக் கலை, சோழர் செப்பேடுகள், தமிழர் காசு இயல், இராசராசேச்சுரம் முதலிய பல தமிழ் நூல்களையும் Under Sea Exploration off the shore of Poompuhar, The Metropolis of the Medieval Cholas முதலிய ஏராளமான ஆங்கில நூல்களையும் எழுதியதோடு, பல நூல்களைப் பதிப்பித்து, தொல்லியல் ஆய்வுத் துறைக்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் நடன. காசிநாதன்.

இவரது அளப்பரிய பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாகத் தமிழ்நாடு அரசின் உவே.சா. விருது, சிறந்த நூல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற ஆய்வுச் செம்மல் நடன. காசிநாதன். பணி ஓய்வுக்குப் பின்னும், தீவிரமாகத் தன் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்த அறிஞரான திரு. நடன. காசிநாதன் மறைவு தொல்லியல் துறைக்குப் பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார். அறிஞர் பெருமக்கள். மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.