வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
டெல்லி: வங்க தேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.ஷேக் ஹசீனா பதவியை விட்டு விலகியதை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்த பிறகு ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்பட பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டு கொல்ல ஹசீனா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு டாக்காவில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. இந்த நிலையில் மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. மேலும் மொத்தம் 5 குற்றச்சாட்டுகள் ஷேக் ஹசீனா மீது வைக்கப்பட்ட நிலையில் 3 குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு மற்ற நாடு அடைக்கலம் தருவது நட்பற்ற முறையாகும். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுஸ்மானை இந்தியா ஒப்படைக்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுப்பது நீதியை அவமதிப்பதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை பதில்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக "வங்காளதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்" அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. ஒரு நெருங்கிய அண்டை நாடாக, வங்காளதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது, அதில் அமைதி, ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும். அந்த நோக்கத்திற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம் என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


