சென்னையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் குத்திக்கொலை: போட்டு கொடுத்த தோழி ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கணவன்
சென்னை: சென்னையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலியின் கணவன், தோழி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அசோக் நகர் 4வது பிரதான சாலையில் நேற்று மதியம் சொகுசு கார் ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது பெண் தோழியுடன் நெருக்கமான நிலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர், வாலிபரை, காரில் இருந்து இழுத்து போட்டு கத்தியால் மார்பில் குத்திக் கொன்றனர்.
இதுதொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலையான நபர், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (38) என்றும், இவர் அரசு ஒப்பந்த பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கொலை நடந்த 4வது பிரதான சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து 2 பெண்கள் உட்பட 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கைதானவர்கள் வந்தவாசி மாவட்டத்தை சேர்ந்த கடலூர் போக்குவரத்து துறையில் பணியாற்றும் தனஞ்செழியன் (42), அவரது மனைவி சுகன்யா (37) மற்றும் இவரது தோழி குணசுந்தரி (27) என்பது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதலால் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பிரகாஷூம், சுகன்யாவும் பள்ளி நண்பர்கள். இருவரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனஞ்செழியனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
பின்னர், இருவரும் சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு சுகன்யா, பிரகாஷூடன் தொடர்பில் இருந்து உள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவரம் அறிந்து தனஞ்செழியன் தொடர்ந்து கண்டித்து வந்து உள்ளார். இந்நிலையில், தனஞ்செழியன் மதுபழக்கத்திற்கு அடிமையானதால், சுகன்யா கணவரை பிரிந்து புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்து உள்ளார். இதனால் பிரகாஷூம், சுகன்யாவும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர்.
இந்நிலையில், பிரகாஷ் டெண்டர் விஷயமாக நேற்று சுகன்யாவுடன் சென்னைக்கு வந்து உள்ளார். பின்னர், அசோக்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். இந்த தகவலை சுகன்யாவின் தோழி குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தெரிவித்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனஞ்செழியன், தனது நண்பர்கள் 3 பேர் மற்றும் குணசுந்தரியுடன் அசோக்நகருக்கு சென்று உள்ளார். அப்போது, 4வது பிரதான சாலையில் பிரகாஷூம், சுகன்யாவும் நின்று பேசி கொண்டிருந்ததை பார்த்த தனஞ்செழியன் மற்றும் அவரது நண்பர்கள், பிரகாஷை சரமாரியாக குத்தி கொலை செய்தனர். பின்னர், மனைவி சுகன்யாவையாவை தனஞ்செழியன் அழைத்து சென்று உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தனஞ்செழியனுடன் வந்த 3 பேரை தேடி வருகின்றனர்.
