Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அலையாத்திக் காடுகள் வெறும் மரங்கள் அல்ல, அவை நமது காலநிலையின் உயிர்நாடி: அரசு கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ

தமிழ்நாடு அரசு, அலையாத்திச் சூழல் அமைப்புகளை மீட்டெடுத்துப் பாதுகாப்பதன் வாயிலாக குறிப்பிடத்தக்க விதத்தில் இந்தியாவிற்கான இயற்கைப் பாதுகாப்பு பயணங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 2400 ஹெக்டேர் பரப்பளவிற்கு அலையாத்தி மரக்கன்றுகளை நடவு செய்ததன் மூலமும் 1200 ஹெக்டேர் பரப்பளவிற்கு சிதைவுற்ற சதுப்பு நிலங்களை மீட்டெடுத்ததன் மூலமும் நம் மாநிலத்தில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2023-ம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் மிகவும் பாதிப்புக்குள்ளான எண்ணூர் அலையாத்திக் காடுகளின் மீட்டுருவாக்கத்தினால், அப்பகுதியின் இயற்கைச் சூழல் மேம்பட்டு, பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது, மேலும், கடலோரப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக இன்று சூழலியல் மீள்திறனுக்கு அப்பகுதி ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக் காடுகள் முதல் புதிதாக மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சென்னையின் அடையாறு மற்றும் முட்டுக்காடு கழிமுகப் பகுதிகள் வரை தமிழ்நாட்டின் அலையாத்திக் காடுகள் புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது உயிர்க் கேடயங்களாகவும், கடலோர சமூகங்களின் வாழ்வாதாரமாகவும், இந்தியாவின் காலநிலைக் குறிக்கோள்களை அடைய உதவும் கரிமச் செறிவுகளாகவும் திகழ்ந்து வருகின்றன.

இதே வேகத்தில், தமிழ்நாடு அரசு நம் மாநிலத்தின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாட்டினை இன்று, செப்டம்பர் 23, 2025-ல் மகாபலிபுரத்தில் உள்ள கல்டான் சமுத்ரா எனும் விடுதியில் நடத்தியுள்ளது. இம்மாநாடு முன்னெப்போதும் இல்லாத அளவில் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தோழமை அமைப்புகள் ஆகியவற்றின் பங்கேற்போடு அலையாத்திக் காடுகளை எதிர்காலத்திற்கான சமூக, சூழலியல், மற்றும் காலநிலைக்கான சொத்துக்களாக மாற்ற வழிவகை செய்ய உதவும். தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், இந்நிகழ்வு தேசிய மற்றும் உலக அளவிலான சிறந்த நடைமுறைகளை கற்றுக் கொள்ள உதவிய அதேவேளையில் தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டங்களை பறைசாற்றும் விதமாக நடந்தேறியுள்ளது.

இந்நிகழ்வின் துவக்க விழாவின் போது, வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் , நம் மாநிலத்தின் புதிதாக நடவு செய்யப்பட்ட மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட அலையாத்திக் காடுகள் குறித்த,”தமிழ்நாட்டின் அலையாத்திப் பயணம் (Tamil Nadu’s Mangrove Journey)” எனும் விரிவான அறிக்கையினை வெளியிட்டார்.இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) தலைவர், பாலகிருஷ்ண பிசுபதி, மரு. சௌமியா சுவாமிநாதன், எரிக் சோல்ஹெய்ம், நிர்மலா ராஜா, முனைவர். ரமேஷ் ராமச்சந்திரன், கோ. சுந்தர்ராஜன் மற்றும் முனைவர். ஆ. கலையரசன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வின்போது, தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் துவக்கவிழாவின்போது, இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகளுக்கும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP)-த்திற்கும் இடையே உள்ள ஒத்துழைப்புகளின் நீட்டிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் முதலில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிலையான நகர்ப்புற வெப்பக்குறைப்பு, அதீத வெப்பநிலைகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், காலநிலை மீள்திறன்மிகு விளிம்புநிலைச் சமூகங்களுக்கான வெப்பக்குறைப்பு உட்கட்டமைப்பு உருவாக்கம் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்தப்படும். மேலும் இவ்வொப்பந்தமானது, முக்கியத்துவம் மிக்க புதிய துறைகளான, நெகிழிக் கழிவு மேலாண்மை, சுழல் பொருளாதாரம், காற்றின் தர மேலாண்மை, பசுமைப் பணிவாய்ப்புகள் மற்றும் நீலப் பொருளாதார முன்னெடுப்புகளிலும் ஒத்துழைப்புகளை நல்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்குமிடையே, தமிழ்நாடு முழுவதும் காலநிலை மீள்திறன் மற்றும் தகவமைப்பினை திறன் வளர்ப்பு மற்றும் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதேவேளையில் அடிப்படைக் கள ஆய்வுகள் மூலமும், அலையாத்திக் காடுகள், கடற்புற்கள், பவளப்பாறைகள் மற்றும் சமூகம் சார்ந்த சூழல்-வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பினை வலுப்படுத்த ஆவன செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொருங்கிணைப்புகள் அறிவியல் ஆய்வுகள், கொள்கைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் அலையாத்திக் காடுகளை மீட்டுருவாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும்.

இந்நிகழ்வின் போது வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் உரையாற்றுகையில், “முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் அதேவேளையில் அதனைச் சார்ந்துள்ள மக்களின் வாழ்வாதாரங்களும் மேம்படுத்தப்படும் எனவும், இயற்கையைப் பாதுகாக்க அறிவியல், அரசு நிர்வாகம் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்திருக்கும் இந்நிகழ்வானது தமிழ்நாட்டின் தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது எனத் தெரிவித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம் சுப்ரியா சாஹூ, உரையாற்றுகையில், “அலையாத்திக் காடுகள் என்பது கடலோரங்களில் உள்ள வெறும் மரங்கள் அல்ல, அவை, நம் கடற்கரைகள், சமூகங்கள் மற்றும் நமது காலநிலையின் உயிர்நாடி எனக் கூறினார், மேலும் இம்மாநாட்டின் மூலம் தமிழ்நாடு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் மாநிலங்கள், விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களை ஒன்றிணைக்கக்கூடிய உத்வேகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முயல்வதாகவும் தெரிவித்தார்.

இம்மாநாட்டில், எண்ணூரில் எண்ணெய் கசிவுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள், சென்னையின் "பசுமைச் சுவர்கள்" மற்றும் டெல்டா பகுதிகளில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட அலையாத்திக் காடுகள் நடவு போன்றவை உள்ளிட்ட வழக்காய்வுகள், விளக்கக்காட்சிகள் மற்றும் குழு விவாதங்கள் மூலம் விளக்கப்பட்டன. மேலும், பிற அமர்வுகளின்போது, கார்பன் கிரெடிட்டினை (Carbon Credit) எவ்வாறு நிதியாக மாற்றுதல், அலையாத்திப் பாதுகாப்பிற்கான மரபியல் கருவிகள், எதிர்கால அலையாத்திக் காடுகள் மீட்டுருவாக்கத்திற்கான தளங்களை வரையறுத்தல் மற்றும் கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஒடிஷா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கருத்தாய்வுகள் போன்றவை பகிர்ந்து கொள்ளப்பட்டன. அலையாத்தி ஒருங்கிணைவிற்கான பிரத்யேக அமர்வின் போது World Wildlife Fund for Nature (WWF) -இந்தியா, World Resources Institute (WRI) - இந்தியா மற்றும் கோத்ரேஜ் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மாதிரிகளை எடுத்துக்காட்டும் விதமாக இருந்தது.

இந்த அலையாத்திக் காடுகள் மாநாடு, நீர்நிலைகளைப் பாதுகாப்பதை ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசின் தலைமைத்துவத்தை பறைசாற்றுவதாக இருந்தது. மேலும், அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் தளமாக மட்டுமிராமல் காலநிலை மீள்திறன்மிகு கடல்புறங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அழைப்பாக விளங்கியது. அறிவியல், கொள்கை மற்றும் சமூகப் பங்கேற்பினை ஒருங்கிணைத்தன் மூலம் காலநிலை மாற்றம், உயிர்ப்பன்மைய இழப்பு மற்றும் வாழ்வாதர அழிவு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் அலையாத்திக்காடுகளையும் இணைத்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசின் குறிக்கோளினை இந்நிகழ்வு அறுதியிட்டுக் காட்டியுள்ளது. மொத்தத்தில் இம்மாநாடு, அறிவியலை அடிப்படையாகக் கொண்டு, பொது சமூகத்தினை உடைமையாளர்களாக் கொண்ட அலையாத்திக் காடுகள் பாதுகாப்பினை இந்தியா முழுவதும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு திகழ்ந்தது.