Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயத்தை தொல்லை செய்யும் காட்டுப்பன்றியை விரட்ட பாரம்பரிய வழி...

காட்டுப்பன்றிகளால் அவதியுறுவது விவசாயம் மட்டுமல்ல. சில நேரம், விவசாயிகளும்தான். தமிழ்நாட்டில், கோவை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் காட்டுப்பன்றிகளின் மோதல்களால் அதிகளவு பாதிப்பு அடைந்துள்ளது. இப்படி காட்டுப்பன்றி பெருக்கத்திற்கு காரணம் அவைகளை வேட்டையாடும் ஓநாய், சிறுத்தை, நரி, புலி போன்ற விலங்குகள் குறைந்ததுதான். இதுமட்டுமின்றி ஒரு காட்டுப் பன்றி ஒரு முறை குட்டி ஈனும்போது கிட்டத்தட்ட 6 முதல் 12 குட்டிகளை ஈனுகிறது. மேலும், காட்டின் இயற்கை வளங்கள் மனிதர்களால் அதிகமாகச் சுரண்டப்படுவதால் காட்டுப் பன்றிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களைச் சார்ந்து வாழத் தொடங்குகின்றன. வேளாண் பயிர்களான நெல், சோளம், தானியங்கள் மட்டுமல்லாமல் காட்டுப் பன்றிகள் நிலத் தாவரங்கள், பழத்தோட்டங்களைப் பாதிப்படையச் செய்கின்றன.

காட்டுப் பன்றி மனித மோதல் மற்ற விளைநிலங்களைக் காட்டிலும் காட்டுப் பகுதிகளைச் சுற்றியுள்ள நிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தச் சிக்கலைச் சமாளிக்கப் பல வகையான வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு இடத்தில் கடைப்பிடிக்கப்படும் முறை மற்றொரு இடத்தில் தெரிய வாய்ப்பில்லாததால், இந்தியாவில் பெருவாரியான விவசாய மக்கள் காட்டு பன்றி மனித மோதலைத் தடுக்கக் கடைப்பிடித்து வரும் பாரம்பரிய வழிமுறையை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.

பாரம்பரிய வழிமுறை

பொதுவாகக் காட்டுப் பன்றிகளுக்குப் பார்வை மற்றும் செவித்திறன் மிகவும் குறைவு. இதை ஈடுசெய்யும் வகையில் அவற்றிற்கு மோப்பத்திறன் அதிகமாகும். ஆகவேதான் இது நெடுநேரம் தலைகுனிந்தே நீண்ட மூக்கினைத் தரையில் முகர்ந்து தான் விரும்பும் திசையில் பயணிக்கும். இந்தக் குணத்தினைக் கருத்தில் கொண்டு, காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளைப் பெற்று விவசாயப் பயிர்களைச் சுற்றி வேலிப் போல் மெலிதான கோடுபோல் பரப்பி வருகின்றனர்.இந்த முடி பரப்பப்பட்ட இடங்களில் காட்டுப்பன்றி வரும்போது, அவை தன் மூக்கினால் அவ்விடத்தை நுகரும் போது இந்த மனித முடிகள் பன்றிகளின் நாசித் துவாரங்களில் சென்றடைந்து எரிச்சலை உருவாக்கும். இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் ஏற்படுத்தும். அது மற்ற காட்டுப் பன்றிகளையும் சேர்த்து விரட்டும். பல்வேறு விவசாயிகள் இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காட்டுப்பன்றிகளை 40 முதல் 50 விழுக்காடு வரை கட்டுப்படுத்துகின்றது.