Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிரடி நடவடிக்கை மூலம் பாதுகாக்க வேண்டும்; வனத்தை பெருக்கும் ‘காவலன்’ எண்ணிக்கையில் குறையலாமா? - இன்று (ஆக. 12) உலக யானைகள் தினம்

மதுரை: உலக யானைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று (ஆக. 12) உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகள் என்றாலே சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் அலாதி பிரியம்தான். பிரம்மாண்டமான அதன் கரிய உருவம், தும்பிக்கை, தந்தங்களை பார்த்து மயங்காதோர் இல்லை எனலாம்.

பொதுவாக யானைகளை ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என இரண்டு வகைகளாக பிரிப்பதுண்டு. உலக அளவில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உயிரினமாக உள்ளது. இதற்கேற்ப தமிழக அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாரம்பரிய கோயில்களில் யானைகள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

காடு வளமாக இருந்தால்தான், நாடு வளமாக இருக்க முடியும். அத்தகைய காட்டின் வளர்ச்சியை அதிகரிக்க யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. யானைகள் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 கிலோ அளவு உணவை உட்கொள்ளும். அதுமட்டுமின்றி நாளொன்றுக்கு 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் அருந்தும். மனிதர்களின் உணர்வுகளை காட்டிலும் விலங்குகளுக்கு அதிக உணர்வு இருக்கிறது என்கிறார்கள். அதிலும் குறிப்பாக யானைக்கு பூமியில் ஏற்படும் அதிர்வுகளையும், காலின் மூலம் நிலத்தில் தட்டி அதிர்வை ஏற்படுத்துவதன் மூலம் சுமார் ஒரு மைல் தூரம் வரை உள்ள மற்ற யானைகளுடன் தொடர்பு கொள்கின்றன.

புதிதாக காடுகளை உருவாக்க யானைகளின் பங்கு மிக முக்கிய பங்காக இருக்கிறது. யானைகளின் சாணம் மூலம் மீண்டும் மண்ணில் விதைக்கப்படுகின்றன. யானை சாணங்கள் மூலம் மரங்கள், காடுகள் உருவாகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு யானையும் தங்களது வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக காரணமாக இருக்கின்றன என யானை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வனத்தை பெருக்குவதில் காவலன் போல முக்கிய பங்காற்றும் யானைகள் தற்போது எண்ணிக்கையில் அருகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இவற்றை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் யானைகளின் பங்கு முக்கியமாக திகழ்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயிலில் வளர்க்கப்படும் சுந்தரவல்லி யானை பக்தர்கள் மட்டுமின்றி கோயில் ஊழியர்களிடமும் பெரும் அன்பை பெற்றுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதன் பேரைச் சொல்லி அழைக்கும்போது தலையாட்டுவது அவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரை அழகர்கோயிலில் உள்ள பல்வேறு சிறப்புகளில் இருந்தாலும் கோயில் யானை சுந்தரவள்ளியும் தனி சிறப்புதான்.

அசாம் மாநிலத்திலிருந்து கோயிலுக்கு வாங்கி வரப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் இந்த யானை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைப்பாகன் அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் (சன்னதிக்கு) அழைத்துச் செல்லப்படுகிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரை மலைப்பாதையில் உள்ள பெரியாழ்வார் நந்தவன பூங்காவில் நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 8 முதல் 9 மணி வரை தொட்டில் குளியல். பின்னர் காலை உணவு வழங்கப்படுகிறது.

பின்னர் ஒய்வு அளிக்கப்பட்டு பின்னர் மதிய உணவு வழங்கப்படும். மீண்டும் 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடை பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. பின்னர் மாலை 6 மணி முதல் ஒய்வு அளிக்கப்படுகிறது. யானை குளிப்பதற்கென்று தனியாக குறியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேலும் யானைக்கு பேன் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவ்வபோது கால்நடை மருத்துவர் குழுவினர் கொண்டு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது’’ என்றார்.