*கலெக்டர் துவக்கி வைத்தார்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வத்தல்மலை, சிட்லிங், சித்தேரி, கோட்டப்பட்டி, ஏரிமலை, அலக்கட்டு, பஞ்சப்பள்ளி, ஒகேனக்கல், பெல்ரம்பட்டி, பாலக்கோடு தாலுகாவில் 2 வனப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக, தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமைச் சட்டம் -2006 பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பல நூற்றாண்டுகளாக வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாசிகளுக்கு, அவர்களின் வாழ்விடங்கள், நிலங்கள் மற்றும் வன வளங்கள் மீதான வரலாற்று உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், நிலை நிறுத்துவதற்கும் கொண்டு வரப்பட்ட ஒரு முக்கியமானது வன உரிமைச் சட்டம்.
இந்த சட்டம், பழங்குடியினரின் பாரம்பரிய உரிமைகளை வரலாற்று ரீதியாக சரிசெய்யவும், வனங்களுக்குள் வாழும் சமூகங்களின் வாழ்வாதாரம், கலாச்சாரத்தை பாதுகாக்கவும் வழிவகுக்கிறது பற்றி இப்பயிற்சியில் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் கிராம சபைகளை வலிமைப்படுத்துவதற்கான பயிற்சி முகாம், பாலக்கோடு வட்டம் நல்லூர் கிராமத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சதீஸ் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர், கலெக்டர் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பழங்குடியின மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். வனப்பகுதிகளில் காலங்காலமாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, வன உரிமை சட்டத்தின் படி உரிமைகள் கிடைக்க செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கிராம சபை கூட்ட அறிவிப்பு பதிவேடு, உறுப்பினர்கள் பெயர் பதிவு பதிவேடு, உறுப்பினர்கள் கூட்ட வருகை பதிவேடு, தீர்மான புத்தகம் ஆகிய பதிவேடுகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும். கிராம சபை மற்றும் முதல் வன உரிமைகள் குழு கூட்ட நிகழ்வுகள் நிறைவு பெற்றதும், அனைத்து பதிவேடுகளிலும் பதிவு செய்து, கூட்ட தலைவரும் பதிவு செய்து, தேர்வு பெற்ற பொறுப்பாளரும் கையொப்பம் செய்து, அந்த பதிவேடுகளை ஒப்படைக்க வேண்டும்.
மேலும், பதிவேடு நகலுடன் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அளவிலான குழுவின் தகவலுக்காக அனுப்பிவைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கிராம சபை அளவிலான வன உரிமைக் குழு உறுப்பினர்களான தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு, கடந்த ஜூலை 10ம்தேதி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் பயிற்சி நடந்தது. தொடர்ந்து 11ம்தேதி அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், சித்தேரி சமுதாய கூடத்திலும் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.
இப்யிற்சியில் வன உரிமை குழு உறுப்பினர்களான தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 262 பழங்குடியினர் கிராமங்களில் இருந்து 700 நபர்கள் கலந்து கொண்டனர். அனைத்து வட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த 9ம்தேதி முதல் அக்டோபர் 9ம்தேதி வரை முகாம்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சதீஸ் தெரிவித்தார். இந்த முகாமில், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் அசோக்குமார், பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.