Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வன உரிமை சட்டத்தின்படி வன கிராம சபைகள் அமைக்க வேண்டும்

*தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்

கூடலூர் : தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட பேரவை கூட்டம் கூடலூர் ஜானகி அம்மாள் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். பேபி நகர் கிளை செயலாளர் கமலாட்சி வரவேற்றார்.

சங்க நிர்வாகிகள் மாதன், பிந்து, வசந்தா, லலிதா, சுசீலா, மாணிக்கம், வெள்ளி விஜயன், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் போஜராஜன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி குணசேகரன், சிபிஐ ஒன்றிய செயலாளர் முகமது கனி, ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகி குணசேகரன் ஆகியோர் வாழ்த்தினர்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் கலந்து கொண்டார். கூட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பழங்குடியின மக்களை வன உரிமை அங்கீகார சட்டத்திற்கு புறம்பாக வெளியேற்றிய அரசு அலுவலர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் நிதி மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு மறு குடியமர்வு சட்டம் 2013அடிப்படையில் மறு குடியமர்வு செய்ய வேண்டும்.

புலிகள் காப்பக பகுதிக்குள் பூர்வீகமாக வசிக்கும் பழங்குடி மக்கள் மற்றும் மவுண்ட்டாடன் செட்டி மக்களை நிர்பந்தித்து வெளியேற்றக் கூடாது. அனைத்து கிராமங்களிலும் வன உரிமை சட்டத்தின் படி வன கிராம சபைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வழக்குரைஞர் இர்சாத் அஹமது நன்றி கூறினார்.கூட்டத்தில் பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.