Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எனக்கூறி மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறை நடவடிக்கையால் அதிர்ச்சி

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகடத்தூர், ஜூலை 26: கடத்தூர் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எனக்கூறி, மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையினரின் நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உன்சனஅள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்டது மயிலாபூர் கிராமம். இப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கிணறு வெட்டியும், போர்வெல் அமைத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

மலையாக இருந்த பகுதி கடந்த 2007ம் ஆண்டுக்கு பின் காப்பு வனமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்களில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வனத்துறையினர் மரக்கன்று நடுவதற்காக பொக்லைன் மூலம் குழி தோண்டி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, இது வனத்துறைக்கு சொந்தமான இடம், இதில் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி தோண்டுவதாக தெரிவித்துள்ளனர். வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வனத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் இன்றி தாங்களாகவே அளவீடு செய்து பணியை மேற்கொண்டு வருவதால் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து இப்பகுதியில் விவசாயம் செய்தும், ஆடு மாடுகளை வளர்த்தும் பிழைத்து வருகிறோம். இந்த மலைப்பகுதியை மேய்ச்சல் நிலமாகவும், விளைநிலங்களாகவும் பயன்படுத்தி வந்த நிலையில், பல ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பட்டா கேட்டு மனு அளித்து காத்து கிடக்கிறோம். இந்நிலையில், எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வருவாய்த்துறை மூலம், இப்பகுதி வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வனத்துறையினர் எங்களை இங்கிருந்து காலி செய்யும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வனத்துறை அமைச்சரை சந்தித்து, மனு அளிப்போம், என்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கேட்டபோது, இப்பகுதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே காப்புக்காடாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது காலியிடங்களில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டியபோது, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினர்.