வெளிநாட்டு வேலை ஆசைகாட்டி சைபர் மோசடி கொத்தடிமையாக்கும் கும்பல் தலைவன் குஜராத்தில் கைது: 500க்கும் மேற்பட்டோரை மியான்மர், கம்போடியாவுக்கு கடத்தியது அம்பலம்
அகமதாபாத்: வெளிநாட்டு வேலை, அதிக சம்பளம் ஆசை காட்டி இந்திய இளைஞர்களை மியான்மர், கம்போடியா நாடுகளுக்கு கடத்தில் அவர்களை சர்வதேச சைபர் மோசடி கொத்தடிமைகளாக்கும் கும்பலின் தலைவன் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். வெளிநாட்டில் ஐடி வேலை, அதிக சம்பளம் என ஆசைப்பட்டு மியான்மர், கம்போடியா நாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்கு சைபர் மோசடி கொத்தடிமைகளாக வேலை பார்த்த பல இந்திய இளைஞர்கள் கடந்த சில ஆண்டாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல நாடுகளில் பலரும் இதுபோல் கொத்தடிமையாக வேலை பார்க்க வைக்கப்படுகின்றனர். இதுபோன்ற மனித கடத்தில் கும்பலின் தலைவனாக செயல்பட்ட நிலேஷ் புரோகித் என்கில் நீல் என்பவனை காந்திநகரில் வைத்து குஜராத் சிஐடி கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
‘தி கோஸ்ட்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நிலேஷ் மலேசியாவுக்கு தப்பிச் செல்ல இருந்த நிலையில் பிடிக்கப்பட்டிருப்பதாக குஜராத் உள்துறை அமைச்சர் சங்கவி தெரிவித்துள்ளார். நிலேஷின் துணை ஏஜென்ட்கள் 2 பேரும், உதவியாளர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரம் செய்து இளைஞர்களை கவர்ந்துள்ளனர். இவர்களிடம் வரும் இளைஞர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு, மியான்மர், கம்போடியா நாடுகளுக்கு கடத்தி விடுவார்கள். அங்கு அடைக்கப்பட்ட அறைகளில் இருந்தபடி, கிரிப்டோ கரன்சி மோசடி, டேட்டிங் செயலி மோசடி, கடன் மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்துவார்கள்.
அவர்கள் சொல்வதை கேட்காதவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவார்கள். நிலேஷ் கும்பல் இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், நேபாளம், நைஜீரியா, எகிப்து, கேமரூன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை சர்வதேச சைபர் மோசடி கொத்தடிமைகளாக அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுக்கு 100க்கும் மேற்பட்ட சீனா மற்றும் பிற நாடுகளின் நிறுவனங்களுடன் தொடர்புள்ளது. 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ஏஜென்ட்களுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர். ஒருநபரை சைபர் மோசடி கொத்தடிமையாக்க நிலேஷ் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.3.7 லட்சம் வரையிலும் கமிஷன் பெற்றுள்ளான். இவ்வாறு கிடைத்த பல கோடி பணத்தை மியூல் கணக்குகள் மற்றும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மூலம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இவர்களிடம் குஜராத் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


