வெளிநாட்டினர் குவியும் சர்வதேச நகரமான ஆரோவில்லில் விரைவில் டிராம் சேவை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு
பரபரப்பான இவ்வுலகில் பொது போக்குவரத்துக்கு பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என பல்வேறு நவீன வசதிகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால், இவை கண்டுபிடிப்பதற்கு முன்பாக, பழங்காலத்தில் மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறு ஊர்களுக்கு நடந்தே தான் சென்றனர். அதன்பிறகு மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் வந்தன. அதன்பின்னர் டிராம் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. ரயில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு டிராம் வண்டி தான் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது.
சென்னையில் 1895ல் மெட்ராஸ் எலெக்ட்ரிசிட்டி சிஸ்டம் என்ற கம்பெனி, டிராம் வண்டி சேவையை தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நத்தை போல் ஊர்ந்து செல்லும் இந்த வாகனங்கள் தான் சென்னையில் வலம் வந்தன. சாலைகளில் அமைக்கப்பட்ட மின்ஒயர்களை உரசியபடி இயங்கிய இந்த டிராம் வண்டிகள் தான் மின்சார ரயில்களுக்கு முன்னோடி. அப்போது, சென்னையில் 100 டிராம் வண்டிகள் இயக்கப்பட்டு வந்தன. 1931ல் ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, டிராம் பயன்பாடு குறைந்ததால் 1953ல் டிராம் சேவை நிறுத்தப்பட்டு விட்டன.
தற்போது, இந்தியாவில் கொல்கத்தாவில் மட்டும் இயங்கும் டிராம் வண்டி சேவையை புதுச்சேரிக்கு அருகே 12 கி.மீ தூரத்தில் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள சர்வதேச நகரமான ஆேராவில்லில் தொடங்க இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோவில் நிர்வாகம் மற்றும் தெற்கு ரயில்வே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 1968ல் யுனெஸ்கோ ஆதரவுடன் நிறுவப்பட்ட சர்வதேச நகரம் ஆரோவில். உலகெங்கிலும் இருந்து வரும் மக்கள், பல்வேறு மத, அரசியல், தேசிய வேறுபாடுகளை கடந்து அமைதியாக, நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு உலகளாவிய நகரமாக ஆரோவில் உள்ளது.
ஆரோவில்லின் மொத்த பரப்பளவு சுமார் 20 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் 74 ஹெக்டேர் பரப்பளவு பன்னாட்டு மண்டலத்தில் அமைந்துள்ளது. 50,000 மக்கள் வசிக்கக்கூடிய ஒரு சர்வதேச நகரமாகும். தொழில்துறை, கலாச்சார, குடியிருப்பு, சர்வதேச மண்டலங்கள், நகரை சுற்றிலும் பசுமையான வனப்பகுதிகள், பண்ணைகள், சரணாலயங்கள் உள்ளன. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலரும் வசித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் நேரடி மேற்பார்வையில் உள்ள இந்நகரத்தில் தான், இப்போது 4.4 கிலோ மீட்டருக்கு டிராம் வண்டி இயக்கப்பட உள்ளது.
இதற்காக தெற்கு ரயில்வே குழு ஆரோவில் வந்து களஆய்வு மேற்கொண்டுள்ளது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை நடத்தினர். டிராம்வே பாதையை மதிப்பிடவும், செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப தேவைகளை மதிப்பிடவும் கிரவுன் சாலையில் (டிராம் வண்டி இயக்கப்படும் சாலை) பயணித்தனர். ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு பணி அதிகாரி சீதாராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால் ஆகியோரும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
ஆரோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிராம்வே, பூங்காக்கள், பொது இடங்கள், சேவை முனைகள், சமூக மையங்களை இணைக்கும். குறைந்த வேகத்தில் மின்சாரம் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் போக்குவரத்து அமைப்பாக இது இருக்கும். அமைதியான ஒரு இடத்தில் தனிப்பட்ட மோட்டார் வாகனங்களை நம்பியிருப்பதை குறைக்கும் மற்றும் இந்தியாவில் எதிர்கால நகர்ப்புற இயக்கத்திற்கான ஒரு செயல் விளக்க மாதிரியாக இது இருக்கும். பொறியியலின் அழகினை வெளிப்படுத்தும் வகையில் ஆரோவில் கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் பணியினை உறுதி செய்வார்கள்’ என்று கூறி உள்ளது.
* வெற்றிகரமாக இயக்கப்படுமா?
சென்னையை போல் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும் பாரம்பரிய டிராம் வண்டி சேவை 1873ல் துவங்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. முதல் டிராம் குதிரையால் இழுக்கப்பட்டது. 2023 பிப்ரவரி மாதம், கொல்கத்தா தனது டிராம் வண்டிகளின் 150ம் ஆண்டை கொண்டாடியது. டிராம் வண்டி சேவையை நிறுத்துவதற்கு அதன் ஆர்வலர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்தது.
டிராம்கள் வெறும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் சாதனங்கள் அல்ல, அவை கொல்கத்தா நகரின் முக்கிய போக்குவரத்து முறை என அவர்கள் தெரிவித்து இருந்தனர். இதனால் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் டிராம் சேவை இயக்கப்பட்டு வருகிறது.கொல்கத்தாவில் மட்டும் இயக்கப்படும் டிராம் இப்போது ஆரோவில்லில் வெற்றிகரமாக இயக்கப்படுமா? என கேள்விக்குறி எழுந்துள்ளது.
* சுற்றுலா மேம்படும் ஆரோவில்லில் டிராம் கொண்டு வந்தால்
ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதன்மூலம் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் லாட்ஜ், உணவு விடுதிகள் மற்றும் சிறு கடைகள் புதிதாக உருவாகும் இதன்மூலம் இப்பகுதி மக்களின் வருமானம் உயரும். ஆனால் தற்போது ஆரோவில்லில் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது.
டிராம் வந்தால் கட்டுப்பாடுகள் தளர்த்தினால் தான் பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு மரங்களை வெட்டினால் கூட எதிர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் டிராம் வந்தால் பிரபல நகரமாக ஆரோவில் உருவெடுக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதுவுமில்லை.
* பொம்மை ரயிலும் வருகிறது
சூரிய ஒளி அல்லது மின்சாரத்தில் இயங்கும் டிராம் சேவை மட்டுமின்றி, மழலையர் பள்ளி மண்டலத்திற்குள் 595 மீட்டர் பாதையை விரிவுப்படுத்தி, 12 பெட்டிகள் கொண்ட பொம்மை ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தையும் குழுவினர் ஆய்வு செய்தனர். குறைந்த வேகம், மாசு இல்லாத போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
 
 
   