சென்னை: வெளிநாடுகள் சமீபத்தில் இயற்றிய கடுமையான சட்டங்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் குறைந்துள்ளது. இதற்கு வெளிநாடுகள் சமீபத்தில் இயற்றிய கடுமையான சட்டங்கள், அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சுமார் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி படிக்கச் செல்கிறார்கள். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு படிப்புக்காக பறக்கிறார்கள். அந்தவகையில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மாணவர்களின் உயர்கல்வி படிப்புக்கான விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாததால் அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோல், விசா நிராகரிப்பால் அமெரிக்காவுக்கும், புதிய குடியேற்றக் கொள்கையால் இங்கிலாந்துக்கும் பறக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்திருப்பதாக கூறப்படுகிறது.